போலீசின் வலி போக்கும் வாலிபர்.. இலவசமாக பாத அழுத்த சிகிச்சை.. புதுச்சேரியில்!
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு இலவசமாக பாத அழுத்த சிகிச்சை அளித்து வருகிறார் வாலிபர் பாஸ்கர்.
Recommended Video
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசிய தேவைகளின்றி வெளியே சுற்றி திரிபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்காக நகரம் மற்றும் கிராமப் பகுதிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஷிப்ட் முறையில் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இவ்வாறு பணியில் இருக்கும் காவலர்கள் நீண்ட நேரம் நின்றுகொண்டே பணியாற்றுவதால் அவர்களுக்கு, கால் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல், கால்வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றது. காவலர்களின் கஷ்டத்தை போக்குவதற்காக பாஸ்கர் என்ற வாலிபர், காவலர்களுக்கு இலவசமாக பாத அழுத்த சிகிச்சை செய்து வருகிறார்.


புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர் அந்த பகுதியில் இயற்கை மூலிகை உணவகம் மற்றும் பாத அழுத்த சிகிச்சை மையம் நடத்தி வருகிறார். கொரோனாவால் அவரது உணவகம் மூடப்பட்டிருக்கும் நிலையில், மக்களுக்கு சேவை செய்யும் காவலர்களுக்கு பாத அழுத்த சிகிச்சை அளிக்க முடிவு செய்தார்


இதற்காக காவல்துறை அனுமதியுடன், புதுச்சேரியில் உள்ள காவல்நிலையங்களுக்கு செல்லும் பாஸ்கர், அங்கே பணி முடித்து வரும் காவலர்களுக்கு பாத அழுத்த சிகிச்சை செய்கிறார். இதனால் கால் வலியின்றி, புத்துணர்ச்சியுடன் போலீசார் தங்களது வீடுகளுக்கு செல்கின்றனர். இவரது இந்த சேவையை காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.














Click it and Unblock the Notifications