அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர்
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி, தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து ஒரு மாதத்தைக் கடந்த நிலையிலும், முழுமையான அமைச்சரவை அமையாமல் நீடித்து வந்த அரசியல் முட்டுக்கட்டை ஒருவழியாக தற்காலிக முடிவுக்கு வந்துள்ளது. கூட்டணிக்குள்ளான அதிகாரப் பகிர்வு மோதல், டெல்லி உள்துறை அமைச்சகத்தின் கோப்பு முடக்க விவகாரமாக உருவெடுத்து, இப்போது ஒரு சுமூகமான உடன்பாட்டை எட்டியுள்ளதாக தெரிகிறது.
கடந்த மே 13ம் தேதி என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி 5வது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றபோது, அவருடன் சேர்த்து இரண்டு அமைச்சர்கள் மட்டுமே பொறுப்பேற்றனர்.

மீதமுள்ள 3 இடங்களை நிரப்புவதில் பாஜக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் இடையே திரைமறைவில் நிகழ்ந்த அதிகாரப் போட்டியே இந்த தாமதத்திற்கு முதன்மைக் காரணம் என்பது அரசியல் வட்டாரங்களில் கசிய விடப்பட்டது.
அதிகாரப் பகிர்வில் வெடித்த முரண்பாடுகள்
மொத்தம் 6 இடங்களைக் கொண்ட புதுச்சேரி அமைச்சரவையில், மீதமுள்ள 3 இடங்களுக்கு இரு கட்சிகளுக்கிடையே தேர்தலுக்கு முந்தைய பேச்சுவார்த்தையின்படி விகிதாச்சாரம் முடிவு செய்யப்பட்டிருந்தாலும், சபாநாயகர் பதவி மற்றும் நியமன எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் கடுமையான இழுபறி நீடிக்கவே செய்தது.
புதுவையில் பாஜக தரப்பில் சபாநாயகர் பதவியைக் கோரிய நிலையில், அதனை விட்டுக்கொடுக்க முதலமைச்சர் ரங்கசாமி தயக்கம் காட்டியதாகவும் தெரிகிறது. அதற்கு பதிலாக துணை சபாநாயகர் பதவியை வழங்க அவர் முன்வந்தார். அதே நேரத்தில், தங்களுக்கு சாதகமாக இரண்டு நியமன எம்.எல்.ஏ பதவிகளைப் பெற வேண்டும் என்பதில் என்.ஆர்.காங்கிரஸ் உறுதியாக இருந்தது.
இந்த உள்விவகாரக் குழப்பங்களுக்கு மத்தியில், கடந்த ஜூன் 3ம் தேதி ஆளுநர் கைலாஷ்நாதனைச் சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, புதிய அமைச்சர்களுக்கான லிஸ்ட்டை அளித்து ஒப்புதலுக்கு அனுப்பினார். ஆனால், இந்த கோப்பு ஜனாதிபதி மாளிகைக்குச் செல்வதற்கு முன்பாக, ஒன்றிய உள்துறை அமைச்சகத்திலேயே தங்கிப்போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
டெல்லி பயணம் & கோப்பு முடக்கம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குஜராத் மற்றும் திரிபுரா மாநிலங்களுக்கு அரசுமுறைப் பயணமாகச் சென்றிருந்ததால், கோப்பு உள்துறை அமைச்சகத்தில் தேங்கியதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறினாலும், இதன் பின்னணியில் பாஜவின் அரசியல் அழுத்தங்கள் இருந்ததை மறுப்பதற்கில்லை.
பாஜவின் முக்கிய கோரிக்கைகளுக்கு முதலமைச்சர் ரங்கசாமி இணங்கி வந்தால் மட்டுமே அமைச்சரவை விரிவாக்கம் சாத்தியம் என்ற சூழல் உருவாக்கப்பட்டது.
இதற்கிடையில் ஜூன் 11ம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவுள்ள நிதி அயோக் கூட்டத்தைப் புறக்கணிக்க முதலமைச்சர் அலுவலகம் திட்டமிட்டதாக எழுந்த தகவல்கள், கூட்டணிக் குமுறலின் உச்சக்கட்ட வெளிப்பாடாகப் பார்க்கப்பட்டது. நிதி அயோக் கூட்டப் புறக்கணிப்பு என்ற அஸ்திரமும், நிர்வாகத் தேக்கநிலை குறித்த எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களும் டெல்லி தலைமைக்கு ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தின.
முடிவுக்கு வந்த முட்டுக்கட்டை
அரசியல் நிபுணர்கள் கணித்தபடி, அடுத்தகட்ட முடக்கத்தைத் தவிர்க்க 2 தரப்பிலும் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, இப்போது மத்திய அரசு மீதமுள்ள 3 அமைச்சர்களின் பட்டியலுக்கு இறுதி ஒப்புதலை வழங்கியுள்ளது.
இதன்படி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி. ராஜவேலு, வி.பி. சிவக்கொழுந்து மற்றும் பாஜவைச் சேர்ந்த ஜி.என்.எஸ். ராஜசேகரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெல்லியின் ஒப்புதல் கிடைத்துவிட்டதால், வருகிற ஜூன் 17ம் தேதியே புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தேதிகள் குறிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் கடந்த ஒரு மாத காலமாக புதுச்சேரி அரசியலை உலுக்கி வந்த அமைச்சரவை விரிவாக்கப் படலம் தற்காலிகமாக நிறைவடைந்துள்ளது.
சில சேலஞ்ச்கள்
ஆனால், அமைச்சரவை விரிவாக்கத்திற்கான ஒப்புதல் கிடைத்துவிட்ட போதிலும், புதுச்சேரி தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் உண்மையான சவால் இனிமேல்தான் தொடங்குகிறது.
ஏனென்றால் புதிய அமைச்சர்களுக்கான இலாகாக்களை ஒதுக்கீடு செய்வதில் இரு கட்சிகளுக்கும் இடையே சுமுகமான உடன்பாடு ஏற்படுமா என்பது அடுத்தகட்ட கேள்வியாகும்.
மிக முக்கிய துறைகளை கைப்பற்றுவதில் பாஜக காட்டும் தீவிரமும், அதை தக்கவைக்க ரங்கசாமி நடத்தும் தற்காப்பு அரசியலும் வரும் நாட்களில் இலாகா ஒதுக்கீட்டு இழுபறியாக மாறவும் வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்ல, நியமன எம்.எல்.ஏ விவகாரம் மற்றும் சபாநாயகர் தேர்வு போன்ற அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளில் தேஜ கூட்டணியின் ஒற்றுமை எவ்வாறு கையாளப்படப் போகிறது என்பதை பொறுத்தே இந்த ஆட்சியின் ஸ்திரத்தன்மையும் அமையும்... எனவே பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications