புதுச்சேரியில் சமூக தொற்று மூலம் பரவுகிறதா கொரோனா?.. பாதிப்பு எண்ணிக்கை 4 ஆக உயர்வு
புதுச்சேரி: புதுச்சேரியில் சமூக தொற்று மூலம் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரியாங்குப்பம் பகுதியில் ஏற்கெனவே கொரோனாவால் பாதித்தவரின் மனைவிக்கு கொரோனா வைரஸ் தொற்று மருத்துவ பரிசோதனையில் உறுதியானது.
டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.

புதுச்சேரியிலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் 6 பேர் அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தனர். மேலும் அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிய ரத்த மாதிரி பெறப்பட்டு பரிசோதனை நடைபெற்றது.

ஆய்வின் முடிவில், அரியாங்குப்பம் சொர்ணா நகரை 37 மற்றும் 51 வயதுடைய 2 நபர்கள் மற்றும் திருவண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் மூவரும் இந்திராகாந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கும் தொடர்ந்து மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரியாங்குப்பம் பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபரிடமிருந்து அவருடைய மனைவிக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது, தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் புதுச்சேரியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் முதல்முறையாக சமூக தொற்று மூலம் கொரோனா வைரஸ் ஒருவருக்கு பரவியுள்ளது. இதனால் புதுச்சேரி மக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இதனிடையே அரியாங்குப்பம் பகுதியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள ஒரு நபர், அந்த பகுதியில் இறைச்சி கடை நடத்தி வந்துள்ளார். அவரது கடையில் கடந்த 10 நாட்களாக அந்த பகுதி மக்கள் இறைச்சி வாங்கி சாப்பிட்டுள்ளனர். இதனால் தங்களுக்கும் கொரோனா தொற்று பரவி இருக்குமா? என அந்த கடையில் இறைச்சி வாங்கி சாப்பிட்டவர்கள் கடும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications