புதுச்சேரி கூட்டணியில் குஸ்தி.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களில் தனித்து போட்டி.. திமுக ஷாக்!
புதுச்சேரி: தமிழ்நாட்டில் காங்கிரஸ் - திமுக இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை எட்டப்பட்டுவிட்ட நிலையில், புதுச்சேரியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இந்தச் சூழலில் புதுச்சேரியில் 2 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளதால் திமுக தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது.
தமிழ்நாட்டில் பிரமாண்ட கூட்டணியை அமைத்துள்ளது திமுக. திமுக கூட்டணியில் 21 கட்சிகள் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸ் உடனான தொகுதிப் பங்கீடு நீண்ட இழுபறிக்கு பிறகு ஒருவழியாக நிறைவு பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு என தொடர்ந்து காங்கிரஸ் வலியுறுத்தி வந்தபோதிலும், திமுக அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை. காங்கிரஸ் 39 தொகுதிகள் கேட்டு வந்த நிலையில் 25 தொகுதிகள் மட்டுமே தரப்படும் என நின்றது திமுக.

இந்த சூழலில்தான், காங்கிரஸ் - திமுக மூத்த நிர்வாகிகளின் பேச்சுவார்த்தை காரணமாக, 28 +1 என்ற குறைவாக தொகுதிப் பங்கீட்டிலேயே திமுக கூட்டணியில் தற்போது இணைந்திருக்கிறது காங்கிரஸ். இதன் காரணமாக, புதுச்சேரியிலாவது கடந்த தேர்தலைப்போல அதிக தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் விரும்புகிறது. இதைத்தொடர்ந்து, அங்கு 18 - 20 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் முனைப்பு காட்டுகிறது. ஆனால், அங்கு 6 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக தலைமையிலே கூட்டணி அமைய வேண்டும் என திமுக தரப்பில் இருந்து கூறப்பட்டு வருகிறது.
இதனால், 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் கூட்டணிக்கான தலைமை யார் என்பதிலும், யாருக்கு எவ்வளவு தொகுதிகள் என்பதிலும் தொடர்ந்து இரு கட்சிகள் இடையே மோதல் நீடித்து வருகிறது. கடந்த 2021 புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் 15 இடங்களில் காங்கிரஸ் போட்டியிட்டு 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. இதைக் காரணமாகக் கொண்டே புதுச்சேரியில், திமுக தலைமையிலேயே கூட்டணி தொடரும் என அக்கட்சியின் புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளரும் எம்.பி-யுமான ஜெகத்ரட்சகன் தெரிவித்து வருகிறார்.
விசிக, சிபிஐ, சிபிஐ(எம்) உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் திமுக தலைமையிலேயே கூட்டணி தொடர வேண்டும் என விரும்புவதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில், 20 நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் அழைப்பு இல்லாமலேயே புதுச்சேரி மாநில திமுக பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மூத்த தலைவர்கள் நிர்வாகிகளோடு ஆலோசனையில் ஈடுபட்ட கிரிஷ் சோடங்கர், கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்த ஏழு பேர் கொண்ட கமிட்டியை அமைத்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கிரிஷ் சோடங்கர், தமிழ்நாட்டில் திமுக தலைமையில் கூட்டணி என்பதுபோல புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி என்பதுதான் வழக்கம் எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில், லாஸ்பேட்டை மற்றும் திருபுவனை தொகுதியில் தனித்து களம் காண்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் மோதல் போக்கு நீடிக்கும் சூழலில் 2 தொகுதியில் தனித்து களம் காண்பதாக சிபிஐஎம் கட்சி அறிவித்துள்ளது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது திமுக காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் 14 இடங்களிலும், திமுக 13 இடங்களிலும், கன்யூனிஸ்ட் கட்சி 1 இடத்திலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 1 இடத்திலும் போட்டியிட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் இல்லாமல் தனியாக 1 இடத்தில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications