அமலுக்கு வந்த மின் கட்டண உயர்வு.. ஜூன் 16 முதல் கணக்கு செய்து வசூல்.. புதுச்சேரி மக்களுக்கு ஷாக்
புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் கடந்த ஜூன் மாதம் 16 ம் தேதி முதல் அறிவிக்கப்பட்டிருந்த மின் கட்டண உயர்வு இரண்டு மாதங்களுக்குப் பிறகு தற்போது அமலுக்கு வந்துள்ளது. மின் கட்டணங்கள் ஜூன் 16 முதல் கணக்கிட்டு வசூல் செய்யப்படவுள்ளது. இதனால், பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 2024 ஆம் ஆண்டுக்கான மின் கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக புதுச்சேரி மின் துறை, இணை ஒழுங்கு முறை மின்சார ஆணையத்திடம் கடந்த மார்ச் மாதத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. இதைத்தொடர்ந்து, வீட்டு மின் இணைப்பு, தொழிற்சாலைகளுக்கு மின் கட்டணம், நிலைக் கட்டணத்தை உயர்த்த அனுமதி கேட்டிருந்த நிலையில் அதற்கு அனுமதி கிடைத்தது.

இந்நிலையில், கடந்த ஜூன் 16 ஆம் தேதி முதல் மின்கட்டண உயர்வை அறிவித்தது. ஆனால், இந்த மின் கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் உள்ளிட்டோரிடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்த கட்டண உயர்வை பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வந்தன.
இதையடுத்து, இந்த மின் கட்டண உயர்வை அமல்படுத்துவது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது கடந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக மின் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஜூன் 16 ம் தேதி முதல் மின் கட்டணம் கணக்கிடப்பட்டு வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை வீடுகளில் 50 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு யூனிட்டுக்கு ரூ. 1.45 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இனி இந்தக் கட்டணம் ரூ. 1.95 ஆக வசூலிக்கப்படவுள்ளது. அதேபோல, 100 யூனிட் வரையில் ரூ. 2.25 ஆக இருந்த மின் கட்டணம் இனி ரூ. 2.70 ஆக வசூலிக்கப்படவுள்ளது. மேலும், 101 முதல் 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கான மின்கட்டணம் ரூ. 3.25 இல் இருந்து ரூ. 4 ஆக உயரவுள்ளது.
201 முதல் 300 யூனிட்டுக்கு ரூ. 5.40 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது. அது இனி ரூ. 6 ஆகவும், 301 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவோருக்கு ரூ. 6.80 இல் இருந்து ரூ. 7.50 ஆக கட்டணம் உயர்ந்துள்ளது. நிலைக் கட்டணம் ஒரு கிலோ வாட்டுக்கு ரூ. 30 இல் இருந்து ரூ. 35 ஆக உயர்ந்துள்ளது. தொழிற்சாலைகள், குடிசைத் தொழில்கள், வர்த்தக நிறுவனங்களுக்கு பழைய கட்டணமே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வர்த்தக நிறுவனங்களுக்கு நிலைக் கட்டணம் மாதத்துக்கு 1 கிலோ வாட்டுக்கு ரூ. 75 இல் இருந்து ரூ. 200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, உயரழுத்த மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு நிலைக் கட்டணம் ஒரு கிலோவாட்டுக்கு ரூ. 450 ஆக உயர்ந்துள்ளது. சிறு விவசாயிகளுக்கு மாதாந்திர நிலைக்கட்டணம் மோட்டாருக்கு ரூ. 25, இதர விவசாயிகளுக்கு மாதம் ரூ. 100 உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications