நான் சுயநலத்திற்காக செயல்படவில்லை.. என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.. தமிழிசை
புதுவை: நான் சுயநலத்திற்காக செயல்படவில்லை, ஆனால் என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை என் மீது கூறுகிறார்கள் என தெலுங்கானா ஆளுநரும் புதுவை துணை நிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் வேதனை தெரிவித்துள்ளார்.
புதுவையில் பட்டைய கணக்கியல் மாணவர்களின் இரு நாள் மெகா மாநாடு நடைபெற்றது. அந்த விழாவில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பட்டயக் கணக்காளர்கள் எல்லோருடைய வாழ்க்கையிலும் மிக முக்கியமான பங்கு வகிக்கிறார்கள்.
வரி செலுத்தவில்லை என்றால் நாடு முன்னேறாது. கணக்காளர்கள் அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு பாலமாக செயல்படுகிறார்கள். கணக்காலர்கள் இல்லை என்றால் இன்று எதுவும் செய்ய முடியாது என சூழ்நிலை உருவாகி இருக்கிறது என நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.

தமிழிசை சவுந்திரராஜன்
இந்த நிகழ்ச்சியில் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜனிடம் புதுச்சேரியில் ஆளுநர் வெளியேறுமாறும் அவருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் என் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். இது எனக்கு வேதனையை தருகிறது.

ரேஷன் கடை பிரச்சினை
புதுவையில் ரேஷன் கடை பிரச்சினை நீண்ட நாட்களாக இருக்கிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் ரேஷன் கடைகள் மூடப்பட்டன. இதை சரி செய்யும் வகையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உண்மைகளை சொன்னால் என் மீது தவறு கூறுகிறார்கள்.

அர்த்தம் இல்லை
என் மீது தவறு சொல்வதால் எந்த அர்த்தமும் இல்லை. மக்கள் நலனுக்காகத்தான் நான் செயல்படுகிறேன். சுயநலத்திற்காக நான் எதையும் செய்வதில்லை. நான் உண்மையாக பணியாற்றி வருகிறேன் என தமிழிசை தெரிவித்தார். புதுவையில் மின்சாரத் துறையை தனியார்மயமாக்குவதை கண்டித்து துணை நிலை ஆளுநர் தமிழ்சை சவுந்திரராஜனுக்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போஸ்டர்களை கடந்த ஆண்டு ஒட்டி இருந்தனர்.

முன்ஜாமீன் மனு
இது தொடர்பான புகாரின் பேரில் புதுவை கிராண்ட் பஜார் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு தபெதிக மாநில தலைவர் லோகு ஐயப்பன் உள்ளிட்டோர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அப்போது நீதிபதி அவதூறு கருத்துகளோடு போஸ்டர் ஒட்டமாட்டோம் என உறுதிமொழி பத்திரம் தாக்கல் செய்தால் நிபந்தனை முன்ஜாமீன் அளிப்பதாக தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications