"வாத்து பண்ணை".. கதறிய சிறுமிகள்.. கூட்டு பலாத்காரம் செய்த கொடூர கும்பலுக்கு.. சாகும் வரை ஆயுள்
புதுச்சேரி: புதுச்சேரியில் வாத்து பண்ணையில் அடைத்து வைத்து சிறுமிகளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 7 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2020ம் ஆண்டில் புதுச்சேரியில் சிலர் கரும்பு வெட்டுவதற்காக தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து சென்றிருக்கின்றனர். இந்நிலையில், அவர்களது குழந்தைகளை அருகில் இருக்கும் பகுதியில் உள்ள வாத்து பண்ணைகளில் வேலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதாவது, இவர்களின் பெற்றோருக்கு மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் கொடுக்கப்படும். இப்படி காசு கொடுப்பதாக கூறி 6-13 வயது வரை உள்ள சிறுமிகளை சிலர் வாத்து பண்ணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

குழந்தை தொழிலாளர்கள்
இவர்களின் பெற்றோர் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆடு மேய்த்து பிழைப்பு நடத்துபவர்களாவார்கள். இந்நிலையில் அந்த சமயம் பொங்கல் நெருங்கும் சூழல் என்பதால் இவர்கள் புதுச்சேரிக்கு கரும்பு வெட்ட வந்துள்ளனர். இவர்கள் இருளர் சமூக மக்களாவார்கள். எனவே இந்த சூழலை பயன்படுத்தி இவர்களின் குழந்தைகளை சிலர் கொத்தடிமைகளாக அழைத்து வந்துள்ளனர். இந்த சிறுமிகளுக்கு வாத்து பண்ணை அருகே தங்க இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் இங்கேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் இதனை கவனித்த சிலர் குழந்தைகள் நலக் குழுவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

கர்ப்பம்
இதனையடுத்து அதிரடி சோதனை மேற்கொண்ட குழந்தைகள் நலக் குழுவினர் 2 சிறுமிகளை மீட்டனர். பின்னர் மேலும் சில இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தியபோது மீதமிருந்த 3 சிறுமிகளையும் மீட்டனர். இந்த விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. வாத்து பண்ணையின் உரிமையாளர், இதனை நடத்தி வந்த முக்கிய நபர்கள் என முதற்கட்டமாக 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து சிறுமிகள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டனர். அங்கு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது, இந்த 5 சிறுமிகளையும் 7 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்திருக்கின்றனர். இதனையடுத்து சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 13 வயது சிறுமி கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

தந்தையும்
இந்த விஷயம் வெளியான நிலையில் பிரச்னை பூதாகரமாக வெடித்தது. எனவே மீதமுள்ள 4 பேரை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்தனர். இந்த தேடுதலில் நால்வரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு புதுவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. காவல்துறையினர் இதர ஆதாரங்களை திரட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதில் மற்றொரு கொடூரமான விஷயம் என்னவெனில், இந்த சிறுமிகளுக்கு வளர்ப்பு தந்தையாக இருந்தவரும் கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டிருக்கிறார் என்பதுதான்.

இழப்பீடு
ஒரு வழியாக வழக்கு நடந்து முடிந்து இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. தீர்ப்பில் நீதிபதி கூறியிருப்பதாவது, "இந்த குற்றத்தில் 7 பேர் ஈடுபட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இந்த 7 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்க இந்நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அதேபோல பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவருக்கு ரூ.7 லட்சமும், மற்ற சிறுமிகளுக்கு தலா ரூ.5 லட்சமும் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்படுகிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications