பெற்றோரை பராமரிக்கவில்லையெனில்.. இனி சொத்து பத்திரம் ரத்து.. புதுச்சேரி நிர்வாகம் எச்சரிக்கை!
பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகள் மீது எழுதப்பட்டுள்ள சொத்துகள் ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி: பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகள் மீது எழுதப்பட்டுள்ள சொத்து பத்திரம் ரத்து செய்வதுடன், சிறை தண்டனை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் எச்சரித்துள்ளார். அதேபோல், ஒவ்வொரு மனிதனுக்கும் முதுமை பருவத்தில் அன்பும், ஆதரவும் கட்டாயம் தேவை என்று கூறியுள்ள அவர், பிள்ளைகள் பராமரிக்கவில்லை என்ற மனுக்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் என்று கூறியுள்ளார்.
தாயின் சிறந்த கோவிலும் தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பது முதுமொழி. இந்த முதுமொழிக்கேற்ப பல்வேறு நிகழ்வுகளிலும் உடனிருப்பவர்கள் பெற்றோர்கள் தான்.
சிறு வயது முதல் தங்களது குழந்தைகளை பாதுகாப்பாக வளர்த்து சமூகத்தில் சிறந்த மனிதராக திகழ வேண்டும் என்பதே அனைத்து பெற்றோரின் எதிர்பார்ப்பாக இருக்கும். ஆனால் இன்றோ பல குழந்தைகள் தங்களது பெற்றோரை ஒதுக்கி வைக்க கூடிய நிகழ்வுகள் தொடர் கதையாகி வருகிறது.

நடுத்தெருவில் பெற்றோர்
ஆசை ஆசையாய் பிள்ளைகளை பெற்று அவர்களை ஆளாக்கும் பெற்றோரை தவிக்கவிடும் பிள்ளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முதுமை காலத்தில் உள்ள பெற்றோரை, பிள்ளைகள் ஒதுக்கி வைப்பதால், வீட்டில் இருந்து அவர்கள் வெளியேறுகின்றனர். அண்மைக் காலமாக புதுச்சேரியில் இந்த போக்கு அதிகரித்து வருகிறது. பெற்றோரிடம் சொத்துகளை வாங்கிவிட்டு, அவர்களை பராமரிக்காத பிள்ளைகளால், முதுமை காலத்தில் நடுத்தெருவுக்கு பலரும் வருகின்றனர்.

தனித்துவிடப்படும் பெற்றோர்
பிள்ளைகள் பராமரிக்காததை வெளியில் சொன்னால் கவுரவம் போய்விடுமோ என்ற எண்ணத்திலும், பிள்ளைகள் மீது கொண்ட பாசத்தாலும், சங்கடங்களை வெளியில் சொல்லாமல் பெற்றோர் சகித்துக் கொண்டு வாழ்கின்றனர். ஒரு கட்டத்தில் எல்லை மீறும்போது பிள்ளைகளுக்கு பாரமாக இருக்க விரும்பாமல், வீட்டில் இருந்து வெளியேறி அனாதை இல்லங்களிலும், பிச்சையெடுத்தும் கடைசி காலத்தை கழிக்கின்றனர்.

மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து மணிகண்டன் கூறுகையில், சொத்துக்களை எழுதி வாங்கிய பின், பெற்றோரை முதுமை காலத்தில் பராமரிக்காமல், முதியோர் இல்லங்களிலும், தெருக்களிலும் விட்டு செல்வது வேதனைக்குரியது. சொத்துக்களை பெற்றுக் கொண்டு முறையாக பராமரிக்கவில்லை எனில், பெற்றோர் தாராளமாக மாவட்ட நிர்வாகத்தை அணுகலாம்.

சிந்தியுங்கள்
பிள்ளைகள் பராமரிக்கவில்லை என்ற மனுக்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும். அந்த மனுக்கள் மீது உடனடியாக தீர்வு ஏற்படுத்தி தரப்படும். பெற்றோரை பராமரிப்பது பிள்ளைகளின் கடமை. ஒவ்வொரு மனிதனுக்கும் முதுமை பருவத்தில் அன்பும், ஆதரவும் கட்டாயம் தேவை. அது கிடைக்காத பெற்றோர் வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். சிலர் வீட்டை விட்டு விரட்டப்படுகின்றனர். இந்த அவல நிலை மாற ஒவ்வொரு பிள்ளைகளும் சிந்திக்க வேண்டும்.

சொத்து பத்திரம் ரத்து
இன்று அவர்கள் என்றால், நாளை நீங்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பெற்றோரை பராமரிக்காதது குறித்து அதிக அளவில் புகார் வருவதால், மூத்த குடிமக்கள் நலன் பராமரிப்பு சட்டத்தின் கீழ் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகள் மீது எழுதப்பட்டுள்ள சொத்து பத்திரம் ரத்து செய்வதுடன், சிறை தண்டனை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைள் உள்ளாவர் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications