கொடூர செயலுக்கு உதவிய கஞ்சா.. புதுச்சேரி சிறுமி இறுதி ஊர்வலத்தில் போதைப் பொருட்களுக்கு எதிராக கோஷம்!
புதுச்சேரி: புதுச்சேரியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட 9 வயது சிறுமியின் உடல் அடக்கம் இன்று நடைபெற்றது. சிறுமியின் இறுதி ஊர்வலத்தின்போது பொதுமக்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன்பாட்டுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 5-ஆம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி கடந்த மார்ச் 2ஆம் தேதி மாயமான நிலையில், குடும்பத்தினரும், போலீசாரும் தேடி வந்தனர். இந்நிலையில் போர்வையில் சுற்றிக் கட்டப்பட்டிருந்த நிலையில், அப்பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து உடலை மீட்டனர் காவல்துறையினர். வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திய நிலையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக, 60 வயது நபர், 19 வயது இளைஞர் என இருவரை புதுச்சேரி காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். வீட்டின் முன்பாக விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, சற்று தூரத்தில் உள்ள விவேகானந்தன் வீட்டுக்கு கருணாஸ் அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரும், விவேகானந்தனும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மூச்சுத் திணறி மயங்கி விழுந்த சிறுமியை கொலை செய்து, கை, கால்களை கட்டி, உடலை வேட்டி மற்றும் போர்வையில் மூட்டையாகக் கட்டி, வீட்டுக்கு பின்புறமுள்ள கழிவுநீர்க் கால்வாயில் வீசியது விசாரணையில் தெரியவந்தது. கஞ்சா போதையில் இந்தக் கொடூரக் காரியத்தை அவர்கள் செய்ததாகவும் தெரியவந்துள்ளது.
சிறுமி மரணத்திற்கு நீதி கேடு, புதுச்சேரி முழுவதும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜிப்மர் மருத்துவமனையில் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அதனை வாங்க சிறுமியின் பெற்றோர் மறுத்தனர். குற்றவாளிக்கு கடும் தண்டனை வாங்கித் தரப்படும் என முதலமைச்சர் ரங்கசாமி அளித்த உறுதியை ஏற்று சிறுமி உடலைப் பெற்றுக் கொண்டனர்.
கொடூரமாக கொல்லப்பட்ட பச்சிளம் சிறுமியின் உடலுக்கு பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் ஏராளமானோர் நேற்று முதல் அஞ்சலி செலுத்தி வந்தனர். அஞ்சலிக்கு பிறகு சிறுமியின் இறுதி ஊர்வலம், முத்தியால்பேட்டையில் இன்று காலை 10 மணியளவில் தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு போதைப்பொருளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் புழக்கம் புதுச்சேரியில் வெகுவாக அதிகரித்துள்ளதாகவும், கஞ்சா போதையால் குற்றங்களும் பெருகி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், குழந்தையை சிதைத்துக் கொன்ற இந்த கொடூரர்களுக்கு கஞ்சா போதையும் துணையாக இருந்தது தெரிய வந்த நிலையில், சிறுமியின் இறுதி ஊர்வலத்தில் போதைப் பொருட்களுக்கு எதிராக கோஷமிட்டனர்.
மேலும், சிறுமி பயன்படுத்திய பொம்மைகள், பேக், புத்தகங்கள், விளையாட்டு சாமான்கள் ஆகியவை இறுதி ஊர்வல வாகனத்தில் தொங்க விடப்பட்டிருந்தன. தொடர்ந்து, இடுகாட்டில் புதைக்கும்போது, சவக்குழிக்குள் சிறுமி உடலுடன் அவர் பயன்படுத்திய பொம்மைகள், பேக், ஆடைகள், விளையாட்டு சாமான்கள் ஆகியவையும் சேர்த்து புதைக்கப்பட்டன.
இறுதி ஊர்வலத்தையொட்டி, அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனிடையே, ஆளுநர் மாளிகையில் புதுச்சேரி மாநில டி.ஜி.பி, டி.ஐ.ஜி ஆகியோருடன் துணைநிலை ஆளுநர் டாக்டர் சௌந்தரராஜன் அவசர ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications