ஐயோ.. கொடுமை! புதுச்சேரி சிறுமி உடல் அருகே புத்தகம், பொம்மைகள்.. காண்போரை கரைக்கும் இறுதி ஊர்வலம்!
புதுச்சேரி: பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட புதுச்சேரி சிறுமியின் இறுதி ஊர்வல வாகனத்தில் அந்தச் சிறுமியின் பள்ளி புத்தகங்கள், பேக், பொம்மைகள், விளையாட்டு சாமான்கள் ஆகியவை தொங்க விடப்பட்டுள்ளது பார்ப்போரை கலங்கச் செய்கிறது.
புதுச்சேரியில் 9 வயது பச்சிளம் சிறுமி, கொடூரர்களால் சிதைக்கப்பட்டு கொல்லப்பட்டது புதுச்சேரி முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை சிதைத்த கயவர்களுக்கு உடனடியாக உச்ச பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்பதே புதுச்சேரி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஆர்த்தி கடந்த சனிக்கிழமை திடீரென மாயமான நிலையில், சிறுமியின் பெற்றோர் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுமியை பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
2 நாட்களாக சிறுமியின் குடும்பத்தினரும், உறவினர்களும், அப்பகுதி மக்களும், போலீசாரும் என அனைவரும் தேடி வந்த நிலையில் அந்த சிறுமி கொலை செய்யப்பட்டு அவரது உடல், அவர்களது வீட்டின் அருகே இருந்த சாக்கடையில் போர்வையில் சுற்றிய நிலையில் கண்டறியப்பட்டது.
இதுகுறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த சிலர் சிறுமையை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தபோது அவர் கூச்சலிடவே பயத்தில் சிறுமியை கொலை செய்து கை கால்களை கட்டி சாக்கடையில் வீசியது தெரியவந்தது. இது தொடர்பாக 54 வயதான விவேகானந்தன், 19 வயதான கருணாஸ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த கருணாஸ், 2 நாட்களாக அப்பகுதியினருடன் சேர்ந்து சிறுமியை தேடுவதாக நாடகமாடியதும் அம்பலமானது.
கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனை அடுத்து பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி புதுச்சேரியில் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், சிறுமியின் உடலை வாங்க மறுத்து, சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு சிறுமியின் பெற்றோர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என அனைவரும் ஒன்று திரண்டு கடற்கரை சாலை காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து முதலமைச்சர் ரங்கசாமி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் பெற்றோர் உடலை வாங்க ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, சிறுமியின் உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்ட நிலையில், ஏராளமான அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, சிறுமியின் இறுதி ஊர்வலம் இன்று காலை 10 மணிக்கு சிறுமியின் வீட்டில் இருந்து தொடங்கியது. புதுச்சேரி முத்தியால்பேட்டை பாப்பம்மாள் கோவில் பகுதியில் உள்ள இடுகாட்டில் சிறுமையின் உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு போதைப்பொருளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.சிறுமியின் இறுதி ஊர்வலத்தை முன்னிட்டு அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிறுமியின் இறுதி ஊர்வல வாகனத்தில் அந்தச் சிறுமியின் புத்தகங்கள், பள்ளிக்கூட பேக், சிறுமி மகிழ்ச்சியுடன் விளையாடிய பொம்மைகள், விளையாட்டு சாமான்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. சில நாட்களுக்கு முன்பு கூட பொம்மைகளுடன் விளையாடிய சிறுமி, இறுதி ஊர்வல வாகனத்தில் பொம்மை போலக் கிடப்பது அப்பகுதி மக்களை கலங்க வைத்துள்ளது.












Click it and Unblock the Notifications