புதுச்சேரி சிறுமி கொலை.. குற்றவாளிகளுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்.. தனி அறையில் அடைக்க உத்தரவு
புதுச்சேரி: 9 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகள் இருவருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் பிறப்பித்து புதுச்சேரி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். குற்றவாளிகளை சிறை கைதிகள் தாக்க வாய்ப்புள்ளது என்பதால் அவர்களை தனி சிறையில் அடைக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலைநகரைச் சேர்ந்த 9வயது சிறுமி சில தினங்களுக்கு முன்பு காணாமல் போனாள். உறவினர்களும், காவல்துறையினரும் சிறுமியை தேடி வந்த நிலையில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்று, கை கால்களை கட்டி கழிவுநீர்க் கால்வாயில் வீசியிருந்தனர். கால்வாயில் இருந்த சிறுமியின் உடலை கண்டுபிடித்த போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 2 நாட்களாக சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். புதுச்சேரி முழுவதுமே கொந்தளிப்பான நிலை காணப்பட்டது. சிறுமியை கொடூரமாக கொன்றவர்களுக்கு கடுமையான தண்டனை தரவேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், சோலை நகரைச் சேர்ந்த கருணாஸ்,19, விவேகானந்தன்,57 ஆகியோரை நேற்று கைது செய்தனர். பிரேத பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. முதல்வர் ரங்கசாமி சிறுமியின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் ரூ.20 லட்ச ரூபாய் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து சிறுமியின் உடலை பெற சம்மதம் தெரிவித்த பெற்றோர் இன்று இறுதி அஞ்சலிக்குப் பிறகு பாப்பம்மாள் மயானத்தில் அடக்கம் செய்தனர். வழிநெடுகிலும் பொதுமக்கள் சிறுமிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இதனிடையே சிறுமி கொலை வழக்கு சம்பந்தமாக துணைநிலை ஆளுநர் தமிழிசை காவல்துறை உயர் அதிகாரிகளுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். ஆளுநர் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் டிஜிபி ஸ்ரீநிவாஸ், டிஐஜி சின்ஹா, எஸ்எஸ்பி அனிதா ராய், எஸ்எஸ்பி கலைவாணன் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.
விசாரணையை விரைந்து முடிக்கவும் குற்றவாளிகளை முழுமையாக அடையாளம் கண்டு கடுமையான தண்டனையைப் பெற்றுத் தரவும் துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தினார். இத்தகைய சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருப்பதற்கு கண்காணிப்பு நடவடிக்கைகளை காவல்துறை முடுக்கி விட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இது தொடர்பாக முதல்வருக்கு துணைநிலை ஆளுநர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "மனதிற்கு மிகவும் வருத்தம் அளிக்கக்கூடிய சிறுமி மரணம் ஒட்டுமொத்த சமுதாயத்தின் மனசாட்சியையும் உலுக்கி இருக்கிறது. இந்த வழக்கில் விரைந்தும் விரிவாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம். சிறுமிக்கு அஞ்சலி செலுத்த நேற்று சென்றிருந்தபோது இந்த வழக்கை விசாரணை செய்ய குழு அமைக்கப்படும் என்று பொதுமக்களுக்கு உறுதி அளித்திருந்தேன்.
மூத்த காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு விசாரணை குழுவிடம் இந்த வழக்கு விசாரணை ஒப்படைக்கப்பட்டு இருப்பதை அறிகிறேன். ஒரு சிறப்பு தடயவியல் குழுவின் பங்களிப்பும் இந்த விசாரணையை விரைவுபடுத்த துணையாக இருக்கும். புதுச்சேரி காவல்துறை, இந்த வழக்குக்கு முன்னுரிமை கொடுத்து விசாரணையை விரைவுப்படுத்தும்.
விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்று பொது மக்களின் உச்சபட்ச எதிர்பார்ப்பினை ஏற்று அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இதன் மூலமாக நிர்வாகத்தின் மீதும், நீதி அமைப்பின் மீதும் மக்களுக்கான நம்பிக்கையை உறுதிப்படுத்தி சட்டம்-ஒழுங்கு நிலையை நிலை நாட்ட முடியும்" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே சிறுமியை கொன்ற குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடப்போவதில்லை என்று புதுச்சேரி வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தில் குற்றவாளிகளை ஆஜர்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதால் நீதிபதியே நேரடியாக மத்திய சிறைக்கு சென்று விசாரணை மேற்கொண்டார். குற்றவாளிகளை 15 நாட்கள் சிறைக்காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். சிறைக்குள் மற்ற சிறை கைதிகளால் இருவரும் தாக்குதலுக்கு ஆளாக வாய்ப்பு உள்ளதால் இரண்டு பேரையும் தனி சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications