ஊரடங்கைத் தளர்த்த மத்திய அரசு முடிவு.. முதல்வர் நாராயணசாமி தகவல்!
புதுச்சேரி: மே 3 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கில் தளர்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, புதுச்சேரியில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான அரியாங்குப்பம், முத்தியால்பேட்டை, ரெட்டியார்பாளையம், திருவாண்டார்கோயில் ஆகிய பகுதிகளில் இருந்து, ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவர் உட்பட 69 பேருக்கு உமிழ்நீர் மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

இதில் 68 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி இல்லை என்று முடிவு வந்துள்ளது. ஆனால் ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவருக்கு இப்பொழுதும் கொரோனா தொற்று இருப்பதாக முடிவு வந்துள்ளது. 6வது முறையாக அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி வந்துள்ளது.
நான் விசாரித்தபோது கேரள மாநிலத்தில் ஒரு பெண்மணிக்கு கொரோனா தொற்று இருந்து 28 முறை மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று அறிகுறி இருப்பதாக முடிவு வந்துள்ளது. ஆகவே அடிக்கடி ஒருசில நபருக்கு கொரோனா தொற்று வருகின்ற காரணத்தால் மத்திய மருத்துவ ஆராச்சி மையத்திடம் பேசி வேறு ஏதேனும் மாற்று மருந்து இருந்தால் அதனை கேட்டு அவர்களுக்கு கொடுக்க, நம்முடைய மருத்துவ தலைமை அதிகாரிக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் 3 பேர் ஆரோக்கியமாக இருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான மருந்து, உணவு வகைகள் கொடுக்கப்படுகிறது. காரைக்கால், மாஹே, ஏனாம் கடந்த 25 நாட்களாக கொரோனா தொற்று இல்லாத மாவட்டங்களாக இருக்கின்றன.

புதுச்சேரி எல்லைப்பகுதிகளில் சோதனைக்கு பின்னரே வாகனங்கள் அனுமதி அளித்து வரும் நிலையில், எல்லையில் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து மருத்துவ சிகிச்சை செய்யவருபவர்கள் தவிர மற்ற எந்த நபருக்கும் மாநிலத்துக்குள் நுழைய அனுமதி இல்லை.
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், வெளிநாடுகளுக்கு படிக்கச்சென்ற மாணவர்கள் நமது நாட்டுக்கு திரும்ப வர விமான சேவை இல்லாத நிலையில் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமரிடம் நான் வைத்த கோரிக்கையை ஏற்று வேறு மாநிலங்களுக்கு புலம் பெயர்ந்து தொழிலாளர்கள், படிக்க சென்ற மாணவர்கள், சுற்றுலாப்பயணிகள் இரு மாநில ஒப்புதலோடு சொந்த மாநிலம் செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரதமருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதனால் நாட்டில் ஏற்படும் போராட்டத்தை மத்திய அரசு தடுத்து நிறுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களிலிருந்து வெளிநாடுகளுக்கு படிக்கவும், பணிபுரியவும் சென்றவர்கள் விபரங்கள் தனி குழு மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அவர்களை மீண்டும் புதுச்சேரிக்கு கொண்டு வர பிரதமருக்கும், வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதவுள்ளேன்.
புதுச்சேரியில் சமூக இடைவெளி, தூய்மை கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளுடன் தொழிற்சாலைகளை துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இங்கு பணிபுரிய தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை. ஊரடங்கில் தளர்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் அதற்கான விதிமுறைகள் புதுச்சேரிக்கு அனுப்பவில்லை.
புதுச்சேரியில் மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் பொருளாதார மேம்பாடு என இரண்டையும் சரியாக மேற்கொள்ள வேண்டும். மே 3 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஊரடங்கு தொடர்பாக மத்திய அரசும், பக்கத்து மாநிலமான தமிழகம் என்ன முடிவெடுக்கின்றன என்பதை ஆய்வு செய்து புதுச்சேரியில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிரமம் பாராமல் பணியாற்றும் மருத்துவர்கள்,செவிலியர்கள்,துப்புரவு பணியாளர்களுக்கும் மற்றும் சிறப்பாக செயல்படும் மாவட்ட நிர்வாகத்துக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன் என நாராயணசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications