உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
புதுச்சேரி: புதுச்சேரி இளைஞர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் உடல் பருமன் அறுவை சிகிச்சை மேற்கொண்டு உயிரிழந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு அவரது தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை டி.வி. நகரைச் சேர்ந்தவர் செல்வநாதன் என்பவர் மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு ஹேமசந்திரன், ஹேமராஜன் என இரட்டை ஆண் பிள்ளைகள் (26 வயது) உள்ளனர். இந்த இரண்டு பேரில் ஹேமசந்திரன் பி.எஸ்.சி. ஐ.டி. முடித்து விட்டு டிசைனராக வேலை செய்து வந்தார். ஹேமராஜன் சித்தா பார்மசிஸ்ட் முடித்துவிட்டு பணியாற்றி வருகிறார்.

இதில் ஹேமசந்திரன் உடல் பருமன் அதிகம் உள்ளவர். இவர் தனது உடல் பருமனை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்காக பல்வேறு இடங்களை தேடி வந்தவர், சென்னை குரோம்பேட்டை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தாராம்.
இந்த நிலையில் நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால்
அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களில் அவர் இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக மருத்துவர்கள் தெரிவத்தனர்.
இதையடுத்து கதறி அழுததுடன், அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் சென்னை பம்மல் காவல் நிலையத்தில் மருத்துவமனை நிர்வாகம் மீது புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையே மகனை பறிகொடுத்த செல்வநாதன், முதல்வர் ஸ்டாலினுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் கூறும் போது, என் மகன் பெயர் ஹேமச்சந்திரன், பிஎஸ்சி ஐடி படித்துள்ளார். உடல் பருமன் காரணமாக தேடியவருக்கு, யூடியூப்பில் விளம்பரம் வந்தது.. சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் அடிக்கடி விளம்பரம் போடுவார்.. உடல் எடையை குடல் அறுவை சிகிச்சை செய்வது போல் செய்து, 6 மாதத்தில் 60 கிலோ அல்லது 50 கிலோ குறைப்பேன் என்று அந்த டாக்டர் விளம்பரம் செய்தார். மேலும் இந்த அறுவை சிகிச்சை தான் கியாரண்டி என்று கூறினார். இந்த விளம்பரத்தை பார்த்து என்னுடைய பையன் போக வேண்டும் என்று சொல்லியிருந்தார்.. எனக்கு உடன்பாடு இல்லை..
என் பையனுக்காக குடும்பத்துடன் போய் நாங்கள் டாக்டரை சந்தித்து ஆலோசித்தோம்.. ஒன்றும் இல்லை சிம்பிளான ஆப்ரேசன் என்றார்.. பம்மலில் உள்ள மருத்துவமனையில் வைத்து ஆப்ரேசன் செய்வேன் என்று கூறினார். இத்தனை லட்சம் செலவாகும் என்று அவரது உதவியாளர் கூறினார். நான் அவர்களிடம் யோசித்து சொல்கிறேன் என்று கூறிவிட்டு வந்துவிட்டேன்.. ஆனால் ஒரு வருடம் கழித்து என் பையனிடம் வாட்ஸ் அப்பில் அடிக்கடி பேசி வந்தார் ...
என் பையன் அடிக்கடி வற்புறுத்தியதால், அவருக்காக ஒப்புக்கொண்டேன்.. குரோம்பேட்டையில் உள்ள பெரிய மருத்துவமனையில் செக் அப் எல்லாம் முடிந்தது. ஆப்ரேசனுக்கு பெரிய டாக்டர் எந்த ஒப்பினியனும் கொடுக்கவில்லை.. ஆனால் அதற்குள் பம்மலில் உள்ள டாக்டர் ஆப்ரேசனுக்கு தேதி குறித்தார். மருத்துவமனையில் ஆப்ரேசனுக்கு சேர்த்த சில நிமிடங்களில் இறந்து போனார்... எந்த சோதனையும் இல்லாமல் இப்படி செய்துவிட்டாரகள். இந்த மருத்துவர் மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கண்ணீர்மல்க கோரிக்கை வைத்தார்.












Click it and Unblock the Notifications