பாரதி வாழ்ந்த மண் புதுச்சேரிக்கு வந்தது மகிழ்ச்சி : தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரி: துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்க புதுச்சேரி வந்துள்ள தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரதி வாழ்ந்த புதுச்சேரி மண்ணுக்கு வந்தது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு செயல்படுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும், அம் மாநில அரசுக்கும் இடையே கடந்த 4 ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனால் அவரை மாற்ற வேண்டும் என்று புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

கடந்த வாரம்கூட குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தினார். இந்த நிலையில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்யவே அங்கு நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
நாராயணசாமி முதல்வராக நீடிக்கத் தகுதியற்றவர் என்றும் ஒரு நொடி கூட முதல்வராக நீடிக்கத் தகுதியற்றவர் என்றும் எதிர்கட்சியினர் தெரிவித்தனர். பெரும்பான்மையை நிரூபிக்க நாராயணசாமியை உத்தரவிட வேண்டும் என்று எதிர்கட்சியினர் வலியுறுத்தினர்.
அதே நேரத்தில் ராஜினாமா செய்யப்போவதில்லை என்றும் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றும் கூறினார் நாராயணசாமி. இந்த சூழ்நிலையில் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி அந்த பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Exclusive: இலங்கை பாஜக விரைவில் தொடங்கப்படும்... சிவசேனை தலைவர் சச்சிதானந்தன் தடாலடி
இன்று அதற்கான உத்தரவு அவரிடம் வழங்கப்பட்டது. இதனையடுத்து விமானம் மூலம் புதுச்சேரிக்கு வந்தார் தமிழிசை சவுந்தரராஜன். அவருக்கு அங்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. வரவேற்பினை ஏற்றுக்கொண்ட தமிழிசை சவுந்தரராஜன், மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக கூறினார்.
தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்ட போது அங்கு போய் தெலுங்கு கற்றுக்கொண்டேன். இப்போது புதுச்சேரியில் மொழி பிரச்சினை இல்லை தமிழ் எனது மொழி எனது பெயரிலேயே தமிழ் இருக்கிறது என்று கூறினார். புதுச்சேரி பாரதி வாழ்ந்த மண் இங்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் கூறினார்.
நாளை காலை 9 மணிக்குப் புதுவை துணைநிலை ஆளுநர் மாளிகையில் தமிழிசை சவுந்தராஜன் பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளதாக ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.