வனவாசி பெருமித நாளில் கொடுமை.. தமிழிசை பங்கேற்ற விழாவில் பழங்குடியின மக்களை தரையில் அமர வைத்த அவலம்!
புதுச்சேரி: புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்ற பழங்குடியினர் தின விழாவில், பழங்குடியின மக்கள் தரையில் அமர வைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்த நாள் வனவாசி பெருமித தினமாக இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிர்சா முண்டாவின் உருவச் சிலைக்கும், அதன் அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்துக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பிர்சா முண்டா பிறந்த இடமான ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில் உள்ள உலிஹாட்டுவில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் அரசு சார்பில் வனவாசி பெருமித தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில், ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக பழங்குடியினர் பெருமித தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற வனவாசி பெருமித தின கொண்டாட்டம் காணொளிக்காட்சி வாயிலாக புதுச்சேரியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இந்த விழாவில் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "பழங்குடியின மக்களுக்கு பல திட்டங்களை பிரதமர் அறிவித்துள்ளார். அவர்களுக்கான திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் நமது லட்சியம், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற வாகன பிரச்சார இயக்கத்தை தொடங்கி வைக்கிறார். புதுச்சேரியில் பழங்குடி யின மக்களுக்கு பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பிரதமர் எப்போது ஆட்சிக்கு வந்தாலும் பழங்குடியின மக்களுக்கான பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். பழங்குடியினர் வளர்ச்சிக்கு பிரதமரோடு இணைந்து புதுவை அரசும் செயல்படும். முதலமைச்சரோடு இணைந்து புதுச்சேரி மாநில பழங்குடியின மக்களின் கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என உறுதியளிக்கிறோம்." எனப் பேசினார்.
இந்த நிகழ்ச்சியின்போது, பழங்குடியின மக்கள் ஏராளமானோர் தரையில் அமரவைக்கப்பட்டிருந்தனர். எதற்காக எங்களை தரையில் அமர வைத்துள்ளீர்கள் என பழங்குடியின மக்கள் கேள்வி எழுப்பினர். அவர்களுடன் பேசிய அதிகாரிகள், இட வசதி இல்லாததான் காரணமாக சிலரை கீழே அமர வைக்க வேண்டியதாகிவிட்டது எனக் கூறி சமாதானம் செய்தனர். இதனால் இந்த நிகழ்ச்சியின்போது சலசலப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications