வங்காளதேசம் டூ பாண்டிச்சேரி.. அப்பார்ட்மெண்டில் விபச்சாரம்.. சிக்கிய 2 பெண்கள்!
புதுச்சேரி: விபச்சார கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட இரண்டு வங்காளதேச பெண்கள் மீது சட்டவிரோதமாக தங்கி இருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா நகரமான புதுச்சேரியில் அண்மை காலமாக விபச்சாரம், கஞ்சா விற்பனை, கொலை, கொள்ளை என சட்டம் ஒழுங்கு மோசமடைந்துள்ளது. குறிப்பாக புதுச்சேரிக்கு சுற்றுலா வரும் ஐடி ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து விபச்சாரம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி அருகே உள்ள கிருமாம்பாக்கத்தில் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி என பல கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து இப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சாரம் நடப்பதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கு அதிரடியாக சென்ற கிருமாம்பாக்கம் காவல்நிலைய போலீசார், அங்கு இளம்பெண்களை வைத்து விபச்சாரம் செய்துவந்த தனுசு, செல்வம், மணிகண்டன், சாந்தகுமார் ஆகிய நான்கு பேரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு இளம்பெண்களை மீட்ட போலீசார், அவர்களை காப்பகத்தில் தங்க வைத்தனர்.
மீட்கப்பட்ட இளம் பெண்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் கொல்கத்தாவை சேர்ந்தவர்கள் என தவறான தகவலை தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசாரின் கிடுக்குபிடி விசாரணையில், அவர்கள் வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்கள் என்பதும், அழகுநிலைய வேலைக்காக என்று கூறி அவர்களை அழைத்து வந்து, விபசாரத்தில் ஈடுபடுத்தியதும் தெரிய வந்தது.

இதனையடுத்து விசா போன்ற எந்தவித ஆவணங்களும் இல்லாமல், இந்தியாவுக்குள் நுழைந்து சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்காளதேச இளம்பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய அனுமதி கேட்டு போலீசார் புதுச்சேரி நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து, காப்பகத்தில் தங்கியுள்ள வங்காளதேச பெண்கள் மீது தற்போது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இதுபோன்று வேறு யாரேனும் சட்டவிரோதமாக புதுச்சேரியில் தங்கி விபச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனரா எனவும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications