தமிழ்நாட்டில் இப்படியும் ஓர் ஊரா?.. கதவுகளே இல்லாத வீடுகள்.. அசரடிக்கும் புதுக்கோட்டை கிராமம்
புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் இப்படி ஒரு ஊரா? என கேட்கும் அளவுக்கு ஓர் கிராமம் இருக்கிறது. இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை நம்முடைய பல வித்தியாசமான கலாச்சாரங்களில் ஒன்றாக இருக்கிறது. இங்கு வீடுகளுக்கு கதவுகள் கிடையாது, மின்சாரம் கிடையாது, நாய் வளர்க்க மாட்டார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதுதான் நிஜம்.
தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில்தான் இந்த கிராமம் இருக்கிறது. அன்னவாசல் மெயின் ரோட்டிலிருந்து கிளை ரோடு ஒன்று இந்த கிராமத்திற்கு பிரியும், இதில் கொஞ்ச தூரம் சென்றாலே மெய்வழிச்சாலை எனும் கிராமம் வந்துவிடும். கிராமம் பார்ப்பதற்கே வித்தியாசமாக இருக்கும். எனவே இதனை பார்த்த உடனேயே அடையாளம் கண்டுகொள்ளலாம்.

இந்த கிராமம் தோன்றிய வரலாறே கொஞ்சம் சுவாரசியமானதுதான். மார்க்கன்பட்டி கிராமாத்தை சேர்ந்தவர்தான் இந்த இந்த மெய்வழிச்சாலை கிராமத்தையும், அதை வழிநடத்தும் மதத்தையும் தோற்றுவித்தவராவார். இவரை மக்கள் மெய்வழி ஆண்டவர் என்றே அழைக்கின்றனர். இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த இவருக்கு சிறு வயதிலிருந்தே மெய்யில் மீது அதீத ஆர்வம் இருந்துள்ளது. எனவே வீட்டிற்கு வரும் துறவிகளை கவனித்துக்கொள்வதில் அதிக நேரத்தை செலவழித்துள்ளார்.
இப்படி இவரது வீட்டிற்கு வந்த தணிகை மணி பிரான் எனும் துறவி இவரிடம் கேட்ட கேள்விதான் இவரையும் துறவம் பூண்ட செய்தது. தனது மனைவி, குழந்தைகள், குடும்பம் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு துறவம் சென்ற இவர் 12 ஆண்டுகளாக மெய்யிலை தேடியலைந்தார். பின்னர் மதுரை திருப்பரங்குன்றம் அருகில் ஓர் கோயிலை கட்டியதாகவும், அந்த இடத்தை ஆங்கிலேயர் கேட்டதால், அங்கிருந்து புதுக்கோட்டை வந்து சேர்ந்தாகவும் விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள். இவர் தேடியது எல்லாம் அமைதியான ஓர் இடத்தைதான்.
இதற்கு புதுக்கோட்டை மாவட்டம் மிகவும் சரியான தேர்வு. சித்தன்ன வாசல், குடுமியான் மலை என சங்க காலத்திலிருந்தே புதுக்கோட்டையில் பல துறவிகள் வாழ்ந்து வந்துள்ளனர். எனவே இந்த இடத்தில் தற்போது மெய்வழிச்சாலை எனப்படும் கிராமம் இருக்கும் பகுதியில் நிலத்தை வாங்கி தன்னுடைய சீடர்களுடன் தங்கிவிட்டார். 12 ஆண்டுகளாக தான் தேடி கற்ற தத்துவங்களை வாழ்க்கை முறையாக தொகுத்து தனது சீடர்களுக்கு வழங்கினார். அப்படி உருவானதுதான் 'மறலி கைதீண்டா சாலை ஆண்டவர்கள் மெய்மதம்' எனும் மதம்.
இந்த மத்தை சேர்ந்தவர்கள்தான் தற்போது இந்த ஊரில் வசித்து வருகிறார்கள். இந்த ஊரை சுற்றிலும் போகும் மின்சார கம்பங்கள், ஊருக்குள் போகாது. ஏனெனில் மின்சாரத்தை இம்மக்கள் விரும்புவதில்லை. தற்போது சில மாற்றங்கள் வந்திருந்தலும் ஊருக்குள் எங்கும் மின்சார கம்பகள் இல்லை. அதற்கு மாறாக சூரிய விளக்கு கம்பங்கள் இருக்கின்றன. இந்த வீடுகளுக்கு பெயிண்ட் என்பதே கிடையாது. வீட்டின் சுவர் 5 அடி மட்டும்தான் இருக்கும்.
ஊருக்குள் ஒரேயொரு மாடி வீடு கூட கிடையாது. அதேபோல வீடுகளுக்கு வெள்ளை நிற சுண்ணாம்பு அடிக்கப்பட்டிருக்கும். கழிவறை ஊருக்கு ஓதுக்குபுறமாக இருக்கும். இவர்களின் வணக்கம் சொல்லும் முறை முற்றிலும் வித்தியாசமானதாகும். ஊருக்குள் யாரும் நாய் வளர்ப்பதில்லை, பைக்குளை ஊருக்குள் தள்ளிக்கொண்டுதான் வரவேண்டும், வீடுகளுக்கு கதவுகள் கிடையாது, இருந்தாலும் அது பூட்டப்படுவது கிடையாது. கோயிலில் நடைபெறும் அர்ச்சணைகள் முழுக்க முழுக்க தமிழில் மட்டுமே நடைபெறும்.
இந்த ஊரிலிருந்து குற்ற வழக்குகள் மிகவும் சொற்பனம் என அந்த ஊரை சேர்ந்த மக்கள் கூறுகின்றனர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் தங்களுடைய பெயருக்கு முன்னால் ஊரின் பெயரை சேர்த்துக்கொள்கிறார்கள். அதேபோல கட்டாயமாக தலைபாகை அணிந்துக்கொள்கிறார்கள். இதில் சிறப்பு என்னவெனில், இந்த ஊர் மக்கள் தலைபாகை அணிந்திருந்தால் அவர்கள் ஹெல்மெட் அணிய தேவையில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஊருக்குள் வரும் அரசியல்வாதிகள், ஊருக்கு வெளியே காரை நிறுத்திவிட்டு நடந்துதான் வருவார்கள்.
இது எல்லாவற்றையுவிட ஹைலைட்டான ஒரு விஷயம் உள்ளது. அதாவது "பாதையில் நடப்பவன் பாதசாரி, அதுபோல, பிரம்மத்தை நோக்கி நடப்பவன், பிரம்மசாரி; பிரம்மத்துடன் இரண்டறக் கலக்க வேண்டும். இந்த நிகழ்வுகளுக்கு முன் நடப்பது எல்லாம் தற்செயலானது" என்று இந்த மதம் போதிப்பதால் ஊர் மக்கள் பணத்தை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள்.
மட்டுமல்லாது சுமார் 69 சாதிகளை சேர்ந்தவர்கள், வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் எவ்வித பாகுபாடும் இன்றி இங்கு வசித்து வருகின்றனர். இங்கு சாதி ஏற்றத்தாழ்வுகள் கிடையாது. அனைவருக்கும் அனைத்தும் சமம். மட்டுமல்லாது இந்த ஊரில் வாழ்ந்து இறந்தவர்களை அடக்கம் செய்யும்போது 10 அதிசயங்கள் நடப்பதாக சொல்லப்படுகிறது. முகம் மஞ்சள் நிறத்தில் தங்கம் போல மலரும், கை, கால்கள் உறைந்து போகாது, கோயிலிருந்து கொடுக்கப்படும் தீர்த்தம் இறந்தவரின் வாயில் ஊற்றும்போது அது வெளியே வராமல் உள்ளே சென்றுவிடும் என அம்மக்கள் கூறுகின்றனர்.
அதேபோல இந்த ஊர் இளைஞர்கள் எந்த விதமான போதை பழக்கத்தையும் கொண்டிருப்பதில்லை. பெண்கள் பருவமடைந்தால் அதை ரேடியோ கட்டி, விருந்து வைத்து கொண்டாடுவதில்லை. இப்படி எளிமையான, கட்டுப்பான கிராமம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமங்களுக்கும் ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும் என்று ஊர் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்ட ஊர் மக்கள் கூறுகிறார்கள்.











Click it and Unblock the Notifications