கிடா குட்டிக்கு சிவகாமின்னு பேரு வச்சதோட நிறைய குட்டி போடும்னு சொன்ன அண்ணாமலை
புதுக்கோட்டை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தனக்கு அன்பளிப்பாக வந்த கிடாகுட்டிக்கு சிவகாமி என்று பெயர் வைத்ததுடன், நிறைய குட்டி போட வேண்டும் என்றும் கூறினார். தொண்டர்கள் அது கிடாகுட்டி என்று கத்திய நிலையில், அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற யாத்திரையை தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறார். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தொடங்கிய இந்த யாத்திரை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தேனி, கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடந்துள்ளது.

அண்ணாமலை யாத்திரை செல்லும் இடங்களில் எல்லாம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் சாதனை எடுத்துக் கூறுவதுடன், திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். திமுக தலைவர்கள் குறித்தும், திமுக அரசு குறித்தும், ஒவ்வொரு ஊரிலும் பிரச்சாரம் செய்து வருகிறார். அண்ணாலையின் யாத்திரையில் பல்வேறு சுவராஸ்யமான சம்பவங்கள் தினசரி நடந்து வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டையில் நடந்த ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அக்டோபர் 6ம் தேதியான நேற்று மாலை, அண்ணாமலை புதுக்கோட்டை மாவட்டத்தில் யாத்திரை மேற்கொண்டார். அப்போது பாஜக தொண்டர்கள் உள்பட பலரும் உற்சாகமாக வரவேற்றார்கள். புதுக்கோட்டை மச்சவாடியில் இருந்து அண்ணா சிலை வரை கட்சி நிர்வாகிகளுடன் அண்ணாமலை வாகனத்தின் சென்றபடியே யாத்திரையில் ஈடுபட்டு பேசினார். அப்பகுதியில் பாஜகவின் சாதனைகளை கூறி பிரச்சாரமும் மேற்கொண்டவர், வழக்கம் போல் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.
அப்போது புதுக்கோட்டை பாஜக மாவட்ட பொருளாளர் முருகானந்தம், அண்ணாமலைக்கு ஒரு செம்மறி ஆட்டு கிடாக்குட்டியை பரிசாக வழங்கினார், அதனை மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்ட அண்ணாமலை, அது கிடாக்குட்டி என்று சொல்லப்படாதால் அந்த ஆட்டுக்குட்டிக்கு சிவகாமி என்று பெயர் சூட்டினார்.
அண்ணாமலை அப்போது கூட்டத்தினரை பார்த்து, ஆட்டுக்குட்டி வைத்துள்ள பெண் மட்டும் கை தூக்குங்கள் என்று கேட்டார். சிலர் கை தூக்கினார்கள். அப்போது அண்ணாமலை ஒவ்வொருவராக உங்கள் தோட்டத்தில் ஆட்டுக்குட்டி உள்ளதா என்று கேட்டபடி இருந்தார்.
பின்னர் அவர்கள் அனைவரிடமும் நீங்கள் கோபித்துக் கொள்ளாதீர்கள், நீங்கள் கோபித்துக் கொள்ளாதீர்கள் என்றுகூறினார். தொடர்ந்து தனக்கு அன்பளிப்பாக வந்த ஆட்டுக்குட்டியை, இந்த அம்மா அவர்களுக்கு நான் பரிசாக கொடுக்கிறேன் என்றார். ஒரு பெண்ணை மேலே அழைத்து ஆட்டுக்குட்டியை பரிசளித்த அண்ணாமலை, அம்மா இந்த ஆட்டுக்குட்டியை கொண்டு போய் வளருங்க... நிறைய குட்டி போடும். அதை வச்சு முன்னேறுங்க என்று சொல்லிக் கொண்டிருந்தார். அப்போ கீழிருந்த தொண்டர்கள், அண்ணே அது கிடாக்குட்டிண்ணே இது குட்டி போடாது என்று கூட்டமாக கத்தினர்.
இந்நிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை புதுக்கோட்டையில் பேசிய பேச்சுக்களை தாண்டி, கிடா குட்டிக்கு சிவகாமின்னு பேரு வச்சதோட நிறைய குட்டி போடும் என்று தெரியாமல் பேசியது தான் தற்போது ட்ரண்டாகிக் கொண்டிருக்கிறது. அண்ணாமலைக்கு அந்த குட்டியை கொடுக்கும் போதே, இது கிடாகுட்டி என்று கூறியிருந்தால் இப்படி ஆகியிருக்காது என்கிறார்கள் சிலர்.












Click it and Unblock the Notifications