உயிருக்கு போராடும் கருப்புக் கொம்பன் காளை! சோகத்தில் மாஜி அமைச்சர் சி.விஜயபாஸ்கர்! என்ன நடந்தது?
புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் கருப்புக் கொம்பன் காளை உயிருக்கு போராடிய நிலையில் ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வடசேரிப்பட்டியில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் கருப்புக் கொம்பன் காளையும் களமிறங்கியது.

வாடிவாசலில் இருந்து விஜயபாஸ்கரின் காளை அவிழ்த்துவிடப்பட்ட போது சீறிப்பாய்ந்த கருப்புக் கொம்பன், யாரும் எதிர்பார்க்காத வகையில் வாசலில் இருந்த தடுப்புக் கட்டையில் மிக பலமாக மோதியது.
இதனால் அந்த இடத்திலேயே அப்போதே காளை சுருண்டு விழுந்தது. இதனால் ஜல்லிக்கட்டு சிறிது நேரம் நிறுத்தப்பட்டதுடன் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தனது காளை சீறிப்பாய்ந்து செல்வதை காண்பதற்காக ஜல்லிக்கட்டுக்கு வந்திருந்த விஜயபாஸ்கர், நடந்த நிகழ்வால் அப்செட் ஆனதுடன் துடிதுடித்துப் போனார். அடிபட்டு மயக்கமுற்ற நிலையில் கிடந்த தனது காளையின் தலையை கை வைத்து தடவிக்கொடுத்து சோகத்தை வெளிப்படுத்தினார்.
காளை மீது தண்ணீர் தெளிக்கப்பட்டும் அது எழ முடியாமல் வலியால் துடித்ததால் சி.விஜயபாஸ்கர் பதறிப்போனார்.
இதனிடையே அடி பலமானதாக இருந்ததால், தாமதிக்காமல் மேற்கொண்டு உயர் சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கருப்புக் கொம்பன் காளை அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு அனுமதிக்கப்பட்டுள்ள கருப்புக் கொம்பன் காளையானது தொடர்ச்சியாக மயக்க நிலையிலேயே இருப்பதாகவும் தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதகவும் தெரிவிக்கப்படுகிறது.
தனது கருப்புக் கொம்பன் காளை எப்படியும் மீண்டு வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர்.












Click it and Unblock the Notifications