உதயநிதியை முதல்வராக்குவதுதான் ஸ்டாலினின் ஒரே லட்சியம்.. உங்க கனவு நிறைவேறாது.. இறங்கி அடித்த அமித்ஷா
புதுக்கோட்டை: ஏப்ரலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மலரும் என புதுக்கோட்டையில் நடந்த நயினார் நாகேந்திரனின் யாத்திரை நிறைவு கூட்டத்தில் அமித்ஷா பேசினார். ஸ்டாலினின் ஒரே நோக்கம் உதயநிதி ஸ்டாலினை முதல்வர் ஆக்குவது தான் என்றும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லா ஆட்சியான இந்த திமுக ஆட்சியை எப்படியாவது ஒழித்தே தீருவோம் என்று அமித்ஷா கூறினார்.
புதுக்கோட்டையில் இன்று நயினார் நாகேந்திரனின் யாத்திரை நிறைவு கூட்டம் நடந்தது. இதில் பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டனர். குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது அவர் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார்.

அமித்ஷா கூறியதாவது:- பாரத் மாதா கி ஜே.. வந்தே மாதரம்.. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. திமுக கூட்டணியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது. வரும் தேர்தலில் எப்படியாவது திமுகவை ஒழித்தே தீர்வோம். தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதத்தில் என்டிஏ தலைமையிலான ஆட்சி அமையும்.
பாஜகவும், அதிமுகவும் இன்னும் பிற கூட்டணி கட்சிகளும் வலுவான கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்போம். கருணாநிதி, ஸ்டாலின், இப்போது உதயநிதி ஸ்டாலின் என நீங்கள் காணும் கனவு நிறைவேறாது. ஸ்டாலினின் முதல் நோக்கம் உதயநிதியை முதல்வர் ஆக்குவது தான். இந்த கனவு நிறைவேறாது.
2024 தேர்தலில் அதிமுக பாஜக தனித்தனியாக போட்டியிட்டது. இணைந்து போட்டியிட்டிருந்தால் திமுக வெற்றி பெற்றிருக்காது. இந்தியாவிலேயே ஊழல் நிறைந்த ஆட்சி திமுகவின் ஆட்சியாக உள்ளது. தேர்தல் அறிக்கையிலேயே மிககுறைவான வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஆட்சி திமுகவின் ஆட்சி தான்.
ஊழலுக்கான அடையாளமாகிவிட்டது திமுக. சிறைக்கு சென்ற பின்னரும் 248 நாட்கள் அமைச்சராக தொடர்ந்தார் ஒருவர். ஊழல் செய்யும் அரசால் எப்படி வளர்ச்சியை கொடுக்க முடியும்.
நிலக்கரி ஊழல், ரூ.6,000 கோடி ஊழல் விவகாரத்தில் திமுக அமைச்சர்களின் பெயர்கள் உள்ளன. ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசின் வரவு செலவு அறிக்கை, டாஸ்மாக் கடனில் இயங்குகிறது. கருப்பு பணத்தை வெள்ளையாக்குவது, மணல் கொள்ளையில் ஒரு தலைவரின் பெயர் உள்ளது. தமிழ்நாட்டில் எந்த ஒரு வேலைக்கும் 20 சதவீதம் கமிஷன் கொடுக்க வேண்டும் என்ற நிலை காணப்படுகிறது.
ஐபிஎஸ் தேர்வுகளை தமிழில் அறிமுக செய்தவர் பிரதமர் மோடி. பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதி பெயரில் இருக்கை, திருக்குறளை 13 மொழிகளில் மொழியாக்கம் செய்தவர் பிரதமர் மோடி. அருங்காட்சியகத்தில் வைத்து அழகு பார்த்த செங்கோலை நாடாளுமன்றத்தில் வைத்து அழகு பார்க்கின்றவர் தான் மோடி. என்று அமித்ஷா பேசினார்.












Click it and Unblock the Notifications