மேரியின் முகமெல்லாம் வழிந்த ரத்தம்.. விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு ஓடோடி உதவிய அமைச்சர் விஜயபாஸ்கர்!
விபத்தில் காயம் அடைந்த பெண்ணுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி செய்தார்
Recommended Video
புதுக்கோட்டை: விபத்தில் காயமடைந்து விழுந்துகிடந்த பெண்ணின் வாயிலும், மூக்கிலும் ரத்தம் வழிவதை பார்த்ததும், பதறி அடித்து கொண்டு வந்த அமைச்சரும் டாக்டருமான விஜயபாஸ்கர் உடனடியாக முதலுதவி சிகிச்சை செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துவிட்டு அமைச்சர் விஜயபாஸ்கர் திருச்சி ஏர்போர்ட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, குளத்தூர் இளையாவயல் அருகே தேசிய நெடுஞ்சாலை அருகே வரும்போது, ஒரு பெண் கீழே ரத்தம் கொட்டிய நிலையில் விழுந்து கிடந்தார்.

சாலைவிபத்து
அந்த பெண் சாலை விபத்தில் சிக்கியவர் என்றும் பெயர் மேரி என்றும் தெரியவந்தது. பைக்கில் வந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது மூக்கு, வாய், என முகமெல்லாம் ரத்தம் கொட்டியது. இதை பார்த்ததும் பதறி போன அமைச்சர், உடனடியாக காரை விட்டு கீழே இறங்கி வந்தார்.

முதலுதவி
மேரியின் முகத்தில் தண்ணீரை தெளித்தார். ஒரு துணியால் மேரியின் முகத்தில் வழிந்த ரத்தத்தை துடைத்த அமைச்சர், அங்கேயே முதலுதவி சிகிச்சை தந்தார். பிறகு தன்னுடைய பாதுகாப்பு வாகனத்தில் அவரை கீரனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பத்திரமாக ஏற்றி அனுப்பி வைத்தார். அந்த பெண்ணுக்கு கீரனூரில் உடனடி சிகிச்சை தரப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

காயங்கள்
தற்போது அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து நடந்த இடத்தில் வாகன வசதி ஏதும் இல்லாதது போல தெரிகிறது. தக்க சமயத்தில் அமைச்சர் அங்கு செல்லவும், காயமடைந்த பெண்ணை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்ப முடிந்தது. இதுமட்டுமல்ல.. செல்லும் இடங்களில் யாருக்கு எங்கு விபத்து ஏற்பட்டிருந்தாலும், அவர்களுக்கு முதலுதவி செய்து உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பவர்தான் டாக்டர் விஜயபாஸ்கர்.

ஆட்டோ
சில மாதங்களுக்கு முன்புகூட, விராலிமலை பரம்பூர் அருகே சாலை விபத்தில் இளைஞர் சிக்கியதை கண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், உடனடியாக அவரை, தமது பாதுகாப்பு வாகனத்தில் ஏற்றி கொண்டதுடன், அதே வாகனத்தில் தாமும் ஏறி ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று சிகிச்சை தந்தார். இதேபோல, சென்னையில் விபத்தில் அடிபட்டு கிடந்த ஒருவரை, தனது காரிலேயே அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து அந்த ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரித்தவர்தான் அமைச்சர் விஜயபாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications