புதுக்கோட்டையில் புதுமை.. யாரிந்த விஐபி? வடிவேலு வேற இருக்காரே.. விழுந்து விழுந்து சிரித்த ஆலங்குடி
புதுக்கோட்டை: புதுகை அருகே ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் ஒன்று, இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. இதையடுத்து, புதுக்கோட்டை போலீசார் இளைஞர் ஒருவரை கைது செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. என்ன நடந்தது ஆலங்குடியில்?
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் வீடு, அலுவலகங்களுக்கு இணைய வசதி கொடுப்பதற்காக பூமிக்கடியில் பைபர் வயர்கள் பதிக்கப்பட்டுள்ளன.. அதேபோல, வயருக்கு இணைப்பு கொடுக்கும் வகையில், மின்சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன.

பிஎஸ்என்எல்: ஆனால், இந்த வயர்களை யாரோ அடிக்கடி திருடிவிடுகிறார்களாம்.. கடந்த 5 மாதமாகவே, பைபர் வயர், மின் சாதனங்கள் என ஒவ்வொன்றாக களவாடப்பட்டு வருகின்றன. இதனால் அதிர்ச்சி அடைந்த பிஎஸ்என்எல் ஒப்பந்ததாரர்கள், ஆலங்குடி போலீசாருக்கு தகவல் தந்துள்ளார்.. ஆனால் போலீஸ் தரப்பிலோ, இதுகுறித்து புகார் மனுவாக வழங்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.
இதுபுறமிருக்க, ஆலங்குடி பகுதியில் தொடர்ந்து திருட்டு நடத்தி வரும் திருடனுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது, பரபரப்பை தந்து வருகிறது.
அந்த போஸ்டரில், "வாழ்த்துகிறோம்... இன்டர்நெட் கேபிள் திருடா! ஆலங்குடிக்கு டப் கொடுக்கும் எங்கள் ஆருயிர் திருடனே!. சிசிடிவிக்கே தண்ணி காட்டும் எங்கள் திருடர் குல திலகமே!.
வாழ்த்துக்கள்: அண்ணன் ஸ்டைல் Splendor பாண்டியின் 300வது திருட்டு விழா வெற்றி பெறவும், 1000வது திருட்டு விழாவை தாங்கள் கொண்டாடவும் மனமார வாழ்த்துகிறோம்.. கடந்த 5 வருடங்களில் இல்லாததை இந்த 5 மாதங்களில் திருடி அசத்தி காட்டிய எங்கள் திருடனே..
100வது பைபர் கேபிள் - திருட்டு சாதனை விழாவை வாழ்த்த முடியாததால், கேபிள் / பாக்ஸ் மட்டும் இல்லாமல் BSNL அலுவலகத்தையே கொள்ளையடிக்கவும், மேலும் உங்கள் திருட்டு தொழிலை இரவில் மட்டும் இல்லாமல் பகலிலும் கூட்டாளிகளோடு திருடி, BSNL வாடிக்கையாளர்களை தொந்தரவு செய்து, துரிதமாக 1000வது திருட்டு விழாவை தாங்கள் கொண்டாட வாழ்த்துகிறோம்.
பின்குறிப்பு: திருடித்தான் குடும்பத்துக்கு சோறு போட வேண்டிய அவசியம் இல்லை. இதுக்கு பதிலாக வேற தொழில் செய்யலாம். இப்படிக்கு ஆல்பா குரூப்ஸ்" என்று வாசகங்கள் அந்த போஸ்டரில் இடம் பெற்றிருந்தன..
இந்த போஸ்டர் சோஷியல் மீடியாவில் வைரலானதையடுத்து, பிஎஸ்என்எல் இளநிலை அலுவலர் சங்கர சுப்பிரமணியன் நேற்றைய தினம் ஆலங்குடி போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின்பேரில் போலீசாரும் உடனடியாக விசாரணையை மேற்கொண்டனர். அப்போதுதான், இத்தனை நாட்களும் கேபிள் வயர்களை திருடி வந்தது, கல்லாலங்குடியை சேர்ந்த ஆரோக்கிய சுந்தர் ஜெயசீலன்(36) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைதுசெய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.
நடிகர் வடிவேலு: இந்த போஸ்டரில், "நகரம்" படத்தில் நடித்துள்ள வடிவேல் போட்டோ இடம் பெற்றுள்ளது.. அந்த படத்தில் திருடன் கேரக்டரில் வடிவேலு நடித்திருப்பார்.. அதில் ஒரு சீனில், ஒரு வீட்டுக்கு திருட செல்லும்போது, அவரது கூட்டாளிகள், "அண்ணனின் 100வது திருட்டு வெற்றி பெற வாழ்த்துக்கள்.. இப்படிக்கு அண்ணனின் விழுதுகள்" என்று வாழ்த்து போஸ்டர் அச்சடித்திருப்பார்கள்.
இதனை திருட போகும் வீட்டின் முன்பாகவே ஒட்டி வைத்திருப்பார்கள். அத்துடன், போலீஸ் ஜீப்பிலும் ஒட்டி வைத்திருப்பார்கள். இந்த போஸ்டரை பார்த்துதான் போலீசார், சம்பந்தப்பட்ட வீட்டில் தயாராக துப்பாக்கியுடன் வடிவேலுக்காக காத்திருப்பார்கள்.
ஆலங்குடி போஸ்டர்: இதற்கு பிறகு, போலீசார் வடிவேலுவை கைது செய்து ஜீப்பில் ஏற்றி கொண்டுபோவார்கள். இந்த நகரம் படத்தின் வடிவேலுவின் போட்டோக்களை, ஆலங்குடி போஸ்டரிலும் அச்சடித்துள்ளனர். இதை பார்த்து புதுக்கோட்டையே விழுந்து விழுந்து சிரித்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications