பொய் வழக்கு போடுவதில்தான் கவனமா இருக்காங்க.. முதல்வர் ராஜினாமா செய்யனும்.. சவுக்கு சங்கர் கோஷம்
புதுக்கோட்டை: காவல்துறை பொய் வழக்கு போடுவதில் தான் கவனம் செலுத்துகிறது. கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் அக்கறை செலுத்தவில்லை என்றும் கள்ளச்சாராய மரணங்களுக்கு பொறுப்பேற்று முதல்வர் மு.க ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் கோஷம் எழுப்பினார். மோசடி வழக்கு தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
பெண் காவலர்களை இழிவுபடுத்தியது, கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளில் கைதாகி புழல் சிறையில் யூடியூபர் சவுக்கு சங்கர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதும் குண்டாஸ் சட்டமும் பாய்ந்துள்ளது. சிறையில் உள்ள சவுக்கு சங்கர் , மோசடி வழக்கு தொடர்பாக இன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பிறகு போலீசார் சவுக்கு சங்கரை அழைத்து சென்றனர்.

அரசியல் எதிரிகளை பழிவாங்க: அப்பொது நீதிமன்ற வளாகத்தில் சவுக்கு சங்கர் முழக்கம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. சவுக்கு சங்கர் கூறுகையில், "தமிழக அரசு தங்களை எதிர்த்து பேசுபவர்களை, அரசியல் எதிரிகளை பொய் வழக்கு போட்டு பழிவாங்குவதற்காகதான் காவல்துறையை வைத்திருக்கிறது. பொய் வழக்கு போடுவதில் செலுத்தும் கவனத்தை கள்ளச்சாராயத்தை ஒழிக்க செலுத்தியிருந்தால் 33 உயிர்கள் பலி போயிருக்காது.
திமுகவின் அரசியல் எதிரிகளை பழிவாங்க மட்டுமே காவல்துறை பயன்படுத்தப்படுகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் கையாலாகாத தனத்தால் இதுவரை 55 உயிர்கள் கள்ளச்சாராயத்தால் பறிபோயிருக்கிறது. இந்த கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும்" என்று குரல் எழுப்பினார்.
கள்ளக்குறிச்சி சம்பவம்: கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கோவிந்தராஜ் என்ற நபர் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். இதனை வாங்கி குடித்த சிலருக்கு வாந்தி, வயிற்று வலி, வயிற்றெரிச்சல் ஏற்பட்ட நிலையில் அடுத்தடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் தற்போது வரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 80க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்ற கண்ணுக்குட்டி கைது செய்யப்பட்டு, அவரிடமிருந்து 200 லிட்டர் விஷ சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்ததில் அதில் மெத்தனால் கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
மு.க ஸ்டாலின் அறிக்கை: இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட எஸ்.பியை சஸ்பெண்ட் செய்துள்ள தமிழக அரசு, மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த ஷ்ரவன் குமார் ஜடாவத் பணியிடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த் நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது எக்ஸ் பக்கத்தில், கள்ளச்சாராய குற்றங்கள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
10 லட்சம் நிவாரணம்: இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் தடுக்கத் தவறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறிஉள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ரூ.50,000-ம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications