"எப்போ அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயன்றாங்களோ அன்னைக்கே திமுகவிடம் இருந்து வந்துட்டோம்” - துரை வைகோ
புதுக்கோட்டை: "என்றைக்கு அதிமுகவுடன் கூட்டணி வைக்க முயன்றார்களோ அன்றைக்கே திமுக கூட்டணியில் இருக்க முடியாது என வெளியில் வந்துவிட்டோம்" என மதிமுக முதன்மைச் செயலாளரும், எம்.பியுமான துரை வைகோ தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களில் வென்ற நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட்கள், ஐ.யு.எம்.எல். ஆகிய கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்து, ஆட்சிக் கட்டிலில் அமர வைத்தன. முதல்வர் விஜய், காங்கிரஸ், விசிக, ஐ.யு.எம்.எல் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையிலும் இடம் கொடுத்துள்ளார்.

மதிமுக 2 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த நிலையில், வெற்றி பெற்ற இருவருமே திமுகவின் சின்னமான உதயசூரியனில் வென்றிருந்தனர். இதனால் தவெக அமைச்சரவையில் மதிமுக இடம்பெற இயலாத சூழல் ஏற்பட்டது. எனினும், திமுக கூட்டணியில் இருந்து விலகி தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளது மதிமுக.
மதிமுக, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய நிலையில், இரு கட்சிகள் இடையே வார்த்தைப் போர் நிலவி வருகிறது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் திமுகவை விமர்சித்து வருகின்றனர். மேலும், தவெக அரசுக்கு ஆதரவாகக் களமாடி வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக எம்.பி துரை வைகோ, "என்றைக்கு அ.தி.மு.கவுடன் கூட்டணி வைக்க முயன்றாங்களோ அன்னைக்கே தி.மு.க கூட இருக்க முடியாதுனு வெளில வந்துட்டோம். இன்னைக்கு த.வெ.க லஞ்சம் எதுவும் இல்லாம ஒரு அரசா மாற்றத்தை கொடுக்க முயற்சி பண்ணிட்டு இருக்காங்க.
ஏற்கனவே செயல்படுத்தி வரும் திட்டங்களாக இருக்கட்டும், புதிதாக இந்த அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் திட்டங்களாக இருக்கட்டும், மிக சவாலாகவே இருக்கும். நிதி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு சில முயற்சிகளை தவெக அரசு எடுத்துள்ளது. குறிப்பாக அனைத்து துறைகளிலும் பல வித லீக்கேஜ் உள்ளது. அதனை சீர் செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் கூடுதல் வருவாய் அரசுக்கு கிடைக்கும்.
மதவாத அரசியலை எதிர்க்கத்தான் அன்று திமுக கூட்டணியில் சேர்ந்தோம். சாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட ஊழலற்ற நிர்வாகம் குறித்து பேசியதால் இன்று நாங்கள் மட்டுமல்ல, பிற கட்சிகளும் தமிழக வெற்றிக் கழக கூட்டணியில் இணைந்துள்ளன. நிதி பற்றாக்குறை தவெக அரசுக்கு சவாலாக உள்ளது. அதனை சரி செய்யும் முயற்சியில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
