விஸ்வரூபமெடுக்கும் ராகுல்.. பகல்கனவில் பாஜக.. கால் விரலை கூட பதிக்க முடியாது.. ப சிதம்பரம் பளீச்
புதுக்கோட்டை: தமிழ்நாட்டு மக்கள் உணர்வோடு இருக்கும் வரை பாஜகவால் கால் பெருவிரலை கூட பதிக்க முடியாது. இந்தியாவில் ஜனநாயகம் திளைத்து நீதி வெல்லும் போது ராகுல் காந்தி விஸ்வரூபம் எடுப்பார். ராகுல் காந்தியை முடக்கிவிட்டதாக, அடக்கிவிட்டதாக யாரும் கனவு கண்டால் அது பகல் கனவாக போகும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் ஆக்ரோஷமாக கூறினார்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடகா மாநிலம் கோலாரில் நீரவ் மோடி, லலித் மோடி ஆகியோரை பற்றி பேசுகையில் எல்லா திருடர்களின் பெயர்களும் ஏன் மோடி என முடிகிறது என கேள்வி எழுப்பினார். இது சர்ச்சையை கிளப்பியது.
இந்த பேச்சை எதிர்த்து குஜராத் பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி ராகுல் மீது சூரத் நீதிமன்றத்தில் கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ராகுல் தகுதி நீக்கம்
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தியிடம் இருந்து எம்பி பதவி பறிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் வயநாடு தொகுதி எம்பியாக ராகுல் காந்தி இருந்த நிலையில் அவர் நாடாளுமன்ற லோக் சபா செயலகம் மூலம் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

ப சிதம்பரம் பேச்சு
இந்நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் காங்கிரஸ் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய ராஜ்யசபா எம்பியுமான ப சிதம்பரம் பங்கேற்று பேசினார். அப்போது அவர் ராகுலின் தகுதி நீக்கத்துக்கு எதிராக பேசியதோடு, பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த கூட்டத்தில் ப சிதம்பரம் பேசியதாவது:

கால் பெருவிரலை கூட..
இந்தியாவில் மக்களை சந்திப்பதுதான் உண்மையான ஜனநாயகம். எதிர்காலத்தில் ஜனநாயகத்தையும் முடக்க பாஜக நினைக்கிறது. பாஜகவை பொறுத்தமட்டில் தமிழ்நாட்டில் கால் பெருவிரலை கூட பதிக்க முடியாது. நீங்கள் (மக்கள்) உணர்வோடு இருக்கும் வரை, நம் உரிமைகளை பறிக்க யாராலும் முடியாது என நம்பும் வரை, சனாதன சக்திகளை தமிழ்நாட்டில் அனுமதிக்க மாட்டோம் என உறுதியாக இருக்கும் வரை பாஜகவால் ஒன்றும் செய்ய முடியாது.

விஸ்வரூபமெடுக்கும் ராகுல்
மாறாக இந்தியாவில் ஜனநாயகம் திளைக்கும். இந்தியாவில் ஜனநாயகம் திளைத்தால் நீதி வெல்லும். நீதி வெல்லும்போது ராகுல் காந்தி விஸ்வரூபம் எடுத்து உங்களை சந்திக்க வருவார். ராகுல் காந்தியை முடக்கிவிட்டதாக, அடக்கிவிட்டதாக யாரும் கனவு கண்டால் அது பகல் கனவாக போகும்'' என பேசினார்.












Click it and Unblock the Notifications