விபத்தில் சிக்கிய திமுக நிர்வாகியின் தந்தை! மனிதநேயத்துடன் ஓடோடி வந்த மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை திமுக ஒன்றியச் செயலாளரின் தந்தை விபத்தில் சிக்கிய நிலையில், அந்த வழியாக சென்றுகொண்டிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கட்சி பேதமின்றி ஓடோடி வந்து அவரை மீட்டு தனது காரிலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
புதுக்கோட்டை -தஞ்சை சாலையில் உள்ள இச்சடி என்ற இடத்தில் இன்னோவா காரும் டாடா எஸ் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இருவர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்காக ஆம்புலன்ஸ்க்கு தகவல் சொல்லிவிட்டு அக்கம் பக்கத்தினர் கூடியிருந்தனர்.

இந்நிலையில் அவ்வழியாக சென்று கொண்டிருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், விபத்தை பார்த்தவுடன் காரிலிருந்து இறங்கிச் சென்று காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவர் என்ற அடிப்படையில் முதலுதவி சிகிச்சை வழங்கினார். அப்போது புதுக்கோட்டை திமுக ஒன்றியச் செயலாளர் ராமகிருஷ்ணனின் தந்தையும், திமுக நிர்வாகியுமான கலியமூர்த்தி காயத்துடன் நின்று கொண்டிருந்ததை பார்த்த விஜயபாஸ்கர், அவரது கரம் பற்றி நலம் விசாரித்ததுடன் தனது காரிலேயே அவரை மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தார்.

அதேபோல் சரக்கு வேனில் பயணித்து காயமடைந்த நபரையும் தன்னுடன் வந்த காரில் ஏற்றி ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருப்பதை தவிர்க்கும் வகையில் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். திமுக, அதிமுக என கட்சி பாகுபாடு பார்க்காமல் திமுக நிர்வாகியின் தந்தையை விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது மனிதநேய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு முதலமைச்சரின் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications