இன்னும் யாருமே கைதாகலையே.. மீண்டும் அனலடிக்கும் புதுக்கோட்டை வேங்கை வயல்.. இன்று விசாரணை
புதுக்கோட்டை: வேங்கை வயல் வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.. இது தொடர்பாக இன்னும் யாருமே கைதாகாத நிலையில், இந்த வழக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் தமிழ்நாடு முழுக்க பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

ஆர்ப்பாட்டம்: இதைக்கண்டித்து மாநிலம் முழுவதும், பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.. அத்துடன், ஒரே கிராமத்தில் 2 மேல்நீர் தொட்டிகளை வைப்பது ஏன்? என்ற கேள்வியையும் எழுப்பினர்..
இந்த சம்பவத்தை கண்டித்து மாநிலத்தில் பல அரசியல் கட்சிகளும் போராட்டம் நடத்திய நிலையில், வெள்ளனூர் போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்,
விசாரணை: தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்ட போதிலும், யாரும் கைது செய்யப்படவில்லை. எனினும் இந்த சம்பவத்தில், அழுத்தம் அதிகரித்த நிலையில், இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போதுவரை, சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், சந்தேகத்தின் பேரில் இதுவரை 31 பேரிடம் டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. மேலும், 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி வழங்கக்கோரி புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சிபிசிஐடி போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
நடைமுறைகள்: இந்த மனு கடந்த மாதம் 28ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, உண்மை கண்டறியும் சோதனைக்கான வழிகாட்டல் தொடர்பான நடைமுறைகள் குறித்து மனுவாக தாக்கல் செய்ய நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். அதன்படி மனு 5ம்தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது உண்மை கண்டறியும் சோதனைக்கான வழிகாட்டல் நடைமுறைகள் தொடர்பாக மனு தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசார் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதைத்தொடர்ந்து மனு மீதான விசாரணையை 8ம் தேதிக்கு நீதிபதி ஜெயந்தி ஒத்தி வைத்தார். அந்தவகையில், இன்றைய தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக இன்னும் யாரும் கைது செய்யப்படாதது அதிர்ச்சியளிப்பதாக பல கட்சி தலைவர்களும், பிரமுகர்களும் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications