புதுக்கோட்டையில் "துள்ளிய" அயிரை மீன்.. அப்புறம் கட்லா, ஜிலேபி.. குஷியில் பொன்னமராவதி கண்மாய்.. வாவ்
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் நடைபெற்ற சம்பவம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.. இதை பார்த்த பலருக்கும் சிலிர்ப்பு உண்டாகிவிட்டது.
விநோதமான திருவிழாக்களை நடத்துவது நம்முடைய தமிழ்நாட்டில் வழக்கமான ஒன்றாகும்.. பெண்கள் மட்டுமே கொண்டாடும் விழாக்கள், ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்கள் என ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்படுவதுண்டு.

திருவிழா: அதிலும், சித்திரை திருவிழாவின்போது, பல்வேறு கோயில்களில் இதுபோன்ற ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழாக்கள் நடத்தி வருகிறார்கள்.. ஆடுகள் நேர்த்திக்கடனாக கோயிலுக்கு வழங்கப்படுவது கூடுதல் ஸ்பெஷலாகும்.. அந்தவகையில், மீன்பிடித்திருவிழாக்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
கடந்த வாரம்கூட, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே துவார் என்ற கிராமத்தில் மீன்பிடி திருவிழா நடந்தது.. இந்த கிராம மக்களின் பிரதான தொழில் மீன்பிடிப்பது என்பதால், வருடா வருடம் மழை கிடைக்க வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும் என்பதற்காக, இங்கிருக்கும் வள்ளிக்கண்மாயில் மீன்பிடி திருவிழா நடத்துவது வழக்கமாகும். குறிப்பாக, நெல் அறுவடைக்கு பிறகு, கோடைகாலத்தில் இந்த திருவிழா நடத்துவார்கள்.. அப்படித்தான் கடந்த வாரம் இங்கு திருவிழா நடந்தது.
புதுக்கோட்டை : அதுபோலவே, புதுக்கோட்டையில், பொன்னமராவதியிலும் மீன்பிடி திருவிழா நடத்தப்படுவது வாடிக்கையாகும்.. கோடையில் நீர் வற்றும் விவசாய கண்மாய்களில், ஜாதி, மதம் பாராமல் அனைத்து கிராம மக்களும் ஒன்றாக சேர்ந்து, மழைவேண்டியும், ஊர்மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியும், இந்த மீன்பிடித்திருவிழாவை வருடா வருடம் நடத்துவார்கள்.
அந்தவகையில், தற்போது பொன்னமராவதி பகுதிகளில் தினசரி மீன்பிடித் திருவிழா கோலாகலமாக தொடங்கி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.. இதில் ஒருபகுதியாக, பொன்னமராவதி அருகே உள்ள கொப்பனாபட்டி கிராமத்தில் கொப்பான் கண்மாயில் மீன்பிடி திருவிழா இப்போது நடந்துள்ளது..
அங்கு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அதிகாலையிலேயே கையில் மீன்பிடி உபகரணங்களோடு கண்மாய்க்கு திரண்டு வந்துவிட்டார்கள். ஊர் முக்கியஸ்தர்கள் வழிபாடுகளை முடித்தபிறகு, இந்த போட்டியை தொடங்கி வைத்தார்கள். ஒரே நேரத்தில் கிராம மக்கள் போட்டி போட்டுக்கொண்டு கண்மாயில் இறங்கி பாரம்பரிய முறைப்படி ஊத்தா, வலை, பரி, கச்சா போன்ற உபகரணங்களை கொண்டு மீன்பிடிக்க தொடங்கினர். கண்மாயில் இறங்கிய கொஞ்ச நேரத்திலேயே வகை வகையான மீன்களை அள்ளினார்கள்..
வகை வகை மீன்: அதில் ஒவ்வொருத்தர் கைகளுக்கும் நாட்டு வகை மீன்களான ஜிலேபி, கெண்டை, விரால், அயிரை இப்படி வகை வகையான மீன்களை கரையில் கொண்டுவந்து கொட்டினார்கள்.. இநத மீன்களை மகிழ்ச்சியோடு வீட்டிற்கு அனைவரும் பங்கு போட்டு எடுத்துச்சென்றனர். சாதி, மதம் பாராமல், ஒட்டுமொத்த ஊர்மக்களும், ஒரே கண்மாயில் இறங்கி மீன்பிடித்துகொண்டே திருவிழாவை கொண்டாடிய சம்பவம் சுற்றுவட்டாரத்தில் ஆச்சரியத்தை கிளப்பி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications