புதுக்கோட்டை விராலிமலையில் வியப்பை தரும் கல்வெட்டு! இலுப்பூரில் அதை பார்த்தீங்களா? இத்தனை சிறப்புகளா
புதுக்கோட்டை: விராலிமலையை அடுத்த மாராயப்பட்டி கிராமத்தில் வயலின் நடுவே, கி.பி. 17ம் நூற்றாண்டின் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. புதுக்கோட்டையில் ஆட்சி செய்த சிவந்தெழுந்த பல்லவராயர், சிவன் கோயிலுக்கு கொடையாக வழங்கியதும் இந்த கல்வெட்டின் மூலம் தெரியவந்துள்ளது.. இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பும் வியப்பும் ஏற்பட்டு வருகிறது.
2 மாதங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் நைனராஜு தண்டாயுதபாணி கோயிலில் சில சீரமைப்பு பணிகள் நடந்தன. அப்போது, கோயில் நிர்வாகத்தினருக்கு ஒரு கல்வெட்டு கிடைத்தது.

உடனே அவர்கள், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு மையத்திற்கு தகவல் தந்து, அக்கல்வெட்டை ஆய்வு செய்தனர். அப்போதுதான் அந்த கல்வெட்டில் தமிழ் எண்கள் பயன்படுத்தப்பட்டிப்பதும், கிரிகோரியன் வருடங்களை (Gregorian years) தமிழ் எண்களாலேயே குறிப்பிட்டிருப்பதும் தெரியவந்தது..
மொழிகள் முக்கியத்துவம்
அதாவது, 1850-களில் ஆங்கில எண்கள் அவ்வளவாக பயன்பாட்டில் இல்லாதபோது, கல்வெட்டுகளில் கிரிகோரியன் எண்களே பயன்படுத்தப்பட்டது உறுதியானது..
அதுமட்டுமல்லாமல், அக்காலகட்டத்தில் தமிழ் எண்களின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக இந்த கல்வெட்டு அமைந்திருந்தது.. மேலும், கோயிலுக்கு திருப்பணி செய்தவர்களின் பெயர்களை கல்வெட்டில் பொறித்து, அவர்களை கௌரவிக்கும் பழக்கம் இருந்ததையும் இக்கல்வெட்டு எடுத்துக்காட்டியது நினைவிருக்கலாம்.
மீண்டும் புதுக்கோட்டையில் ஆச்சரியம்
இந்நிலையில் மீண்டும் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு ஆச்சரியம் காணப்படுகிறது.. இலுப்பூர் அருகேயுள்ள மாராயப்பட்டி கிராமத்தில், புதுக்கோட்டையை ஆட்சி செய்த சிவந்தெழுந்த பல்லவராயர் என்ற மன்னர், சிவன் கோயிலுக்கு நிலத்தை நன்கொடையாக தந்துள்ளாராம்.. இதற்கான கல்வெட்டுதான் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
இலுப்பூர் வட்டம் மாராயப்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவி தீபிகா, அங்குள்ள கண்டனி குளத்து வயல்வெளியில், கற்பலகை ஒன்றில் எழுத்துக்கள் இருப்பதை பார்த்து, உடனே இதுகுறித்து தகவல் தந்தார்.. இதையடுத்து, பேராசிரியர் முத்தழகன், பாண்டிய நாட்டு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர்கள் நாராயணமூர்த்தி, ராகுல் பிரசாத் குழுவினர், நேரடியாகவே அங்கு கிளம்பி சென்றார்கள்..
காலமுனி கோயிலின் எல்லையாக வணங்கப்பட்டு வரும் கல்தூணுக்கு எதிரே ஊன்றப்பட்டிருந்த அந்த கல்வெட்டை ஆய்வு செய்தனர்.
3 அடி உயர கற்பலகை
அந்த கற்பலகை, கிட்டத்தட்ட 3 அடி உயரம், இரண்டேகால் அடி அகலம் கொண்டதாக இருந்தது.. ஆனந்த வருடம் ஆவணி 6ம் நாள் ஆரியூர் அழகிய சொக்கநாத சுவாமிக்கு சிவந்தெழுந்த பல்லவராயர், இந்த கண்டனி வயலில் உள்ள நிலங்களை சர்வ மானியமாக வழங்கிய செய்தி என்று கற்பலகையில் ஒருபுறம் எழுதப்பட்டுள்ளது. இந்த தானத்துக்கு தீங்கு நினைப்பவர்கள் சிவதுரோகிகளாக கருதப்படுவர் என்றும் அதில் எழுதப்பட்டுள்ளது.
யாரிந்த சிவந்தெழுந்த பல்லவராயர்? இதுகுறித்து பேராசிரியர் முத்தழகன் சொல்லும்போது, "இந்த கல்வெட்டு கிபி 1674ல் எழுதப்பட்டிருக்கலாம்.. புதுக்கோட்டை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.
தீவிரமான சிவபக்தர்
கிபி 17ம் நூற்றாண்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வெள்ளாற்றுக்கு வடக்கே உள்ள பகுதிகளை ஆட்சி செய்த பல்லவராயர் மரபின் கடைசி மன்னன்தான் சிவந்தெழுந்த பல்லவராயர்.. இவர் தீவிரமான சிவபக்தர்.. இந்த நிலக்கொடை போலவே குடுமியான்மலை, திருக்கோகர்ணம் கோயில்களுக்கும் பல்வேறு தானங்களை வழங்கியுள்ளார்.
ராமநாதபுரம் சேதுபதி மன்னருடன் இணக்கமான போக்கு இல்லாததால், கண்டதேவியில் இவர் கொலை செய்யப்பட்டார்.. இதற்குபிறகுதான், தொண்டைமான் அரசர்களுக்கு புதுக்கோட்டையின் ஆட்சிப்பொறுப்பு வழங்கப்பட்டது.
நிலங்கள் தானம்
கல்வெட்டிலுள்ள அழகிய சொக்கநாத சுவாமி என்பது அருகிலுள்ள ஆரியூர் சிவன் கோயிலின் இறைவன் பெயராகும். அதேபோல கண்டனி வயலில் விளையும் நெல்லில் ஒரு குறிப்பிட்ட பங்கை இன்றும்கூட, கோயிலுக்கு விவசாயிகள் வழங்கி வருகிறார்கள்.
இந்த கல்வெட்டின் மறுபக்கத்தில் சூரியன், சந்திரன், திரிசூலத்தின் கோட்டுருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவை சிவன் கோயிலுக்கு வழங்கப்படும் தானத்தை குறிப்பதாகும்.. இந்த கல்வெட்டு பலகைக்கு எதிரே ஊன்றப்பட்டுள்ள கல் தூணில் திரிசூலமும் செதுக்கப்பட்டுள்ளது. கண்டனி குளத்தின் கரையில் வழிபாட்டில் உள்ள காலமுனி கோயிலின் எல்லையாக சூலக்கல்லை உள்ளூர் மக்கள் வணங்கி வருகின்றனர்" என்றார்.
இலுப்பூர் மாராயப்பட்டி கிராமத்தில், மன்னர் சிவன் கோவிலுக்கு நிலம் கொடையாக வழங்கியதை குறிக்கும் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது, மிகப்பெரிய வியப்பை கூடடி வருகிறது.. தமிழ் பேராசிரியர் முத்தழகன் மற்றும் பாண்டிய நாட்டு பண்பாட்டு மைய தொல்லியல் ஆர்வலர்கள் நாராயணமூர்த்தி, ராகுல் பிரசாத் ஆகியோர் தொடர்ந்து இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications