மொத்த மா. செ.க்களை தூக்கிடுவேன்.. இப்படி இருந்தா கட்சியே நடத்த முடியாது! டென்ஷன் ஆன திருமாவளவன்
சென்னை: தனது பேஸ்புக் பக்கத்தில் நிர்வாகிகளுடன் கலந்துரையாடி இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கட்சிக்குள் நிலவும் சிறிய பிரச்சனைகளை கவனத்தில் கொண்டிருந்தால் கட்சியே நடத்த முடியாது என்று ஆதங்கப்பட்டு இருக்கிறார்.
பேஸ்புக் லைவில், "புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் 3 மாவட்ட செயலாளர்களை தவிர்த்து ஒருங்கிணைந்த கலந்தாய்வு கூட்டத்தை நடத்துவதாக அறிவிக்கிறேன். இது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விதிகளுக்கு முரணானதுதான்.

இருப்பினும் கட்சியின் கட்டமைப்புகளை மேம்படுத்த சில மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கிறது. மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க சில நிர்வாகிகள் மனுவை கொடுத்திருக்கிறார்கள். புகார் தற்போது பரிசீலனையில் இருக்கிறது. புகாரின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனில், 144 மாவட்ட செயலாளர்களையும் நீக்க வேண்டி இருக்கும்.
நம்முடைய கட்சி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடும் கட்சி. இது உயிர்ப்புடன் இருக்க வேண்டும். தினமும் மக்களை சந்தித்து அவர்களுடைய பிரச்சனைகளை கேட்டு, அதற்கான தீர்வை பெற்று தருவதுதான் நமது வேலை. இதற்கான திட்டங்களை நாம் வரையறுக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் வீட்டு மனை பட்டா கிடைப்பதற்காக மக்கள் போராடி வருகிறார்கள். இதுபோன்ற பிரச்சனைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
ஆனால் அதை தவிர்த்து சிறிய, சிறிய பிரச்சனையை பெரிதுப்படுத்தினால் என்னால் கட்சியை நடத்த முடியாது" என்று ஆதங்கப்பட்டிருக்கிறார்.
அரசியல் கட்சிகளுக்குள் அரசல் புரசல்கள் நடப்பது இயல்பானதுதான். அந்த வகையில் தற்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள், பஞ்சாயத்துகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. மாவட்ட செயலாளர்கள் சிலர், நிர்வாகிகளாக இருக்கும் தங்களை மதிப்பதில்லை என்றும், முக்கியமான நிகழ்வுகளுக்கு தங்களை ஆலோசிப்பதில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளனர்.
இன்னும் 8 மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு முன்னதாக கட்சியின் வேலைகளை தீவிரப்படுத்த வேண்டும். வாக்காளர்களை தொடர்ந்து சந்திப்பது, பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு பெற்று தருவது. அதை வாக்கு வங்கிகயாக அறுவடை செய்வது போன்றவை அரசியல் கட்சியின் பிரதான பணி. ஆனால், பல மா.செ.க்கள் இந்த பணிகளில் உரிய கவனம் செலுத்தவில்லை என்று சிறுத்தைகள் புலம்பியுள்ளனர்.
எனவேதான் மாவட்ட செயலாளர்களை மாற்றக்கோரி தலைமையிடம் புகார்கள் பறந்திருக்கின்றன. வடகாடு கிராமத்தில் நடந்த சாதிய பிரச்சனையை விசிக தீவிரமாக கையில் எடுத்திருந்தது. இதனை வைத்து உள்ளூரில் கட்சியை வளர்ப்பதில் கட்சிக்குள் இருக்கும் இரு தரப்பினருக்கு பிரச்சனை இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்துதான் திருமாவளவன் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications