Operation 6: விராலிமலை திமுக வேட்பாளரின் அண்ணன் அதிமுகவில் ஐக்கியம்! தட்டி தூக்கிய மாஜி அமைச்சர்!
புதுக்கோட்டை: விராலிமலை தொகுதி திமுக வேட்பாளர் கே.கே.செல்லபாண்டியனின் அண்ணன் அன்புச் செல்வன் உள்ளிட்ட 1000 பேர் அதிமுகவில் இணைந்தனர். இதுகுறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.
தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த வியாழக்கிழமை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. இதில் திமுக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள போராடி வருகிறது. அது போல் அதிமுக ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் புதிதாக இணைந்த தவெகவும் ஆட்சியை பிடிக்கும் கனவில் மிதக்கிறது. இதே கனவுடன் ஏற்கனவே கட்சி தொடங்கிய நாம் தமிழர் கட்சியும் இருக்கிறது. இந்த நிலையில் புது காம்பினேஷனாக பாமக ராமதாஸ் அணி- சசிகலாவின் அஇபுமமுகவும் ஆட்சியை பிடிப்போம் என்கிறார்கள்.
இந்த நிலையில் தேர்தலில் சீட் கேட்டு கிடைக்காமல் பலரும் கட்சி தாவி வருகிறார்கள். மேலும் ஒரு தொகுதியில் ஒரு கட்சியின் செல்வாக்கை சரிக்க அந்த நபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி டீல் பேசி தங்கள் கட்சிக்குள் இழுக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.
அந்த வகையில் திமுகவை சேர்ந்த 1000 பேர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 தொகுதிகளையும் கைப்பற்ற முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளார்.
அந்த வகையில் அவர் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, விராலிமலை தொகுதி திமுக வேட்பாளர் கே.கே.செல்லபாண்டியனின் அண்ணன் அன்புச்செல்வன் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்துள்ளனர்.
இது திமுகவுக்கு சற்று ஷாக் கொடுத்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வக்கோட்டை, விராலிமலை, புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
அறந்தாங்கி தொகுதியை எடுத்துக் கொண்டால் அதிமுகவின் கோட்டையாக இருந்தது. கடந்த முறை அந்த தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதால் அக்கட்சி வென்றது. தற்போது மீண்டும் இந்த தொகுதி காங்கிரஸுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது.
அது போல் ஆலங்குடி தொகுதியை எடுத்துக் கொண்டால், அதுவும் அதிமுகவின் கோட்டையாக இருந்தது, அதிமுக 5 முறையும் திமுக 4 முறையும் வென்றுள்ளது. கடந்த 2016, 2021 ஆகிய தேர்தல்களில் அமைச்சர் மெய்யநாதன் இந்த தொகுதியை தொடர்ந்து கைப்பற்றியுள்ளார்.
கந்தர்வக்கோட்டை தொகுதியை எடுத்துக் கொண்டோமேயானால் அங்கு அதிமுக இரு முறையும் திமுக ஒரு முறையும், காங்கிரஸ் 3 முறையும் வென்றுள்ளது. கடந்த முறை இந்த தொகுதி மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
திருமயம் தொகுதியில் திமுக 4 முறையும் அதிமுக 3 முறையும், காங்கிரஸ் கட்சி 7 முறையும் வென்றுள்ளது. ஒரு முறை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. இந்த தொகுதியை இரு முறையும் அமைச்சர் ரகுபதியே வென்றுள்ளார். இவர் அதிமுகவில் இருந்து வந்தவர்.
புதுக்கோட்டை தொகுதியை எடுத்துக் கொண்டால் திமுக 5 முறையும் அதிமுக 3 முறையும் இந்திய கம்யூனிஸ்ட் ஒரு முறையும், காங்கிரஸ் கட்சி 5 முறையும் வென்றுள்ளது.
விராலிமலை சட்டசபை தொகுதியில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கடந்த 2011, 2016, 2021 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வென்றுள்ளார். தற்போது திமுக வேட்பாளர் செல்லபாண்டியன் களம் காண்கிறார். இந்த நிலையில் 6 தொகுதிகளையும் அதிமுகவே அள்ள விஜயபாஸ்கர் வியூகம் வகுத்து வருகிறார் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications