"போர்ஷே காரை ஓட்டியது சிறுவன் இல்லை,டிரைவர் தான்.."புனே கார் விபத்து! தொழிலதிபர் தரப்பு அந்தர் பல்டி
புனே: புனே போர்ஷே கார் விபத்து சம்பவத்தில் திடீர் திருப்பமாக, அந்த காரை சிறுவன் ஓட்டவே இல்லை என்றும் டிரைவர் தான் ஓட்டியதாகவும் அச்சிறுவனின் தரப்பு கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனேவில் 17 வயது சிறுவன் குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.. இதில் பைக்கில் பயணித்த இருவர் தூக்கி வீசப்பட்டு கொடூரமாக உயிரிழந்தனர்.

புனே விபத்து: இந்த விபத்தை ஏற்படுத்திய புனேவின் பிரபல கட்டுமான தொழிலதிபரின் மகன் உடனடியாக கைது செய்யப்பட்ட போதிலும் சில மணி நேரத்தில் அவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது விவாதத்தைக் கிளப்பியது. விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் பரபரப்பை கிளப்பிய நிலையில், அந்த சிறுவனின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே புனே கார் விபத்து தொடர்பாக சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது கார் விபத்தை ஏற்படுத்திய போது காரை சிறுவன் ஓட்டவில்லை என்றும் விபத்து நடந்தபோது குடும்ப டிரைவரே காரை ஓட்டியதாகவும் அந்த சிறுவனின் தரப்பு கூறியுள்ளது. விபத்து நடந்த போது சிறுவனுடன் இருந்த மற்ற இரண்டு பேரும் இது உண்மைதான் என்றும் காரை டிரைவர்தான் ஓட்டினார் என்றும் கூறியுள்ளனர்.
சிறுவன் ஓட்டவில்லையாம்: ரியல் எஸ்டேட் தொழிலதிபர் விஷால் அகர்வாலின் மகனான அந்த 17 வயது சிறுவன் மதுபோதையில் பைக் ஒன்றின் மீது தனது சொகுசு காரை மோதியுள்ளான். இதில் பைக்கில் இருந்த தம்பதி தூக்கி வீசப்பட்டுக் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் கைதான அந்த சிறுவனுக்கு வெறும் 17 மணி நேரத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. இது மிகப் பெரியளவில் பேசுபொருள் ஆன நிலையில், ஜாமீனை ரத்து செய்து, சிறுவர் மையத்திற்கு அந்த சிறுவனை அனுப்ப உத்தரவிடப்பட்டது.
முதலில் சிறுவனுக்குக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவே மது குடித்தாக அவரது தரப்பு வழக்கறிஞர் கூறியிருந்தார். பிறகு திடீரென டோனை மாற்றிய அந்த வழக்கறிஞர், டிப்ரஷன் காரணமாகவே சிறுவன் மது குடித்தாக கூறியிருந்தார். இதற்கிடையே இப்போது மீண்டும் அந்த சிறுவனின் தரப்பு புதிதாக சில கருத்துகளைக் கூறியுள்ளது. அதாவது விபத்தை ஏற்படுத்திய போது அந்த காரை சிறுவன் ஓட்டவே இல்லை என்றும் டிரைவரே அந்த காரை ஓட்டியதாகவும் தெரிவித்துள்ளனர்.
விசாரணை: தனது காரை ஓட்டியது தனது டிரைவர் தான் என்று தொழிலதிபர் விஷால் அகர்வாலும் கூறியுள்ளார். இதையடுத்து காரை ஓட்டியதாகச் சொல்லப்படும் அந்த டிரைவரிடம் போலீசார் இன்று விசாரிக்க உள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக புனே போலீசார் அந்த 17 வயது சிறுவனின் தாத்தா சுரேந்திர அகர்வாலிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த போது அவரது மகன் மற்றும் பேரனுடன் அவர் நடத்திய உரையாடல்கள் குறித்த தகவல்களைச் சேகரிக்க முயன்று வருகின்றனர். இது வழக்கு விசாரணையில் முக்கியமானதாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.
புனே போலீஸ்: அதேநேரம் இந்த வழக்கில் குற்றவாளிக்கு கடும் தண்டனை வாங்கி தருவோம் என புனே போலீசார் உறுதி செய்துள்ளனர். வழக்கை முறையாக விசாரித்து வருவதாகக் கூறியுள்ள புனே போலீசார், அந்த சிறுவனின் ரத்த மாதிரிகள் விபத்து நடந்து சில மணி நேரத்தில் இரண்டு இடங்களில் சேகரிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். முதல் ரிப்போர்ட்டில் குளறுபடிகள் ஏற்பட்டாலும் கூட அதைச் சமாளிக்கவே இரண்டாவது ரிப்போர்ட்டை அவர்கள் எடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications