எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது.. இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமநாதபுரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைதான 17 பேரையும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரித்து வருகிறார்கள்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு தர கூறி மீனவர்களும் அவ்வப்போது போராட்டம் செய்து வருகிறார்கள்.

தமிழக முதல்வர் ஸ்டாலினும் மத்திய அரசை இது தொடர்பாக வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று 17 மீனவர்கள் மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்றனர். இந்த நிலையில் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை 17 பேரையும் கைது செய்தது.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட 17 தமிழக மீனவர்களையும் காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரித்து வருகிறார்கள். இதேபோன்று கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்த மீனவர்களின் வலைகளை இலங்கை கடற்படை வெட்டி வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படகு ஒன்றுக்கு ரூ.1 லட்சம் இழப்புடன் மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர். இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications