விஜய்யின் பூர்வீக கிராமம்! தேடிச் சென்ற எஸ்.ஏ.சி. விஜய் தோற்றத்தில் இருக்கும் பெரியப்பா?
ராமநாதபுரம்: நடிகர் விஜய்யின் பூர்வீக கிராமம் முத்துப்பேட்டைதான் என்று தெரியவந்துள்ளது. அங்கேதான் அவரது தாத்தாவின் கல்லறையும் இருக்கின்றது என்று அவரது தந்தை எஸ்.ஏ.சி கூறியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய கடற்கரை கிராமம் முத்துப்பேட்டை. இங்கு ஒரு காலத்தில் கடலில் முத்துக்குளித்து முத்துக்களை எடுக்கும் மீனவ மக்கள் அதிகம் வாழ்ந்துவந்தனர். ஆகவே இந்தக் கிராமம் முத்துப்பேட்டை என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. அன்றைக்கு முத்துக் குளியல் மூலம் பிரபலமான இக்கிராமம் இன்று நடிகர் விஜய்யால் பிரபலமாகியுள்ளது. இந்த ஊருக்கும் விஜய்க்கும் என்ன சம்பந்தம்? அவரால் இது எப்படிப் பிரபலமானது?

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இணையத்தில் நடிகர் விஜய்யின் பூர்வீக கிராமம் இந்த முத்துப்பேட்டைதான் என ஒரு வீடியோ வெளியாகி இருந்தது. அதைப் பார்த்த பலர், 'இது விஜய்யின் பூர்வீக கிராமம் இல்லை' என்று கூறி கருத்திட்டு இருந்தனர். ஆனால், இப்போது அந்தச் செய்தி உண்மைதான் என்பதைப் போல ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது.
பல ஆண்டுகள் கழித்து இப்போது இயக்குநரும் விஜய்யின் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகர் முத்துப்பேட்டையில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு குடும்பத்தினருடன் வருகை தந்தார். அவருடன் அவரது அண்ணன் ராஜசேகர் என்பவரும் வந்திருந்தார். அதாவது விஜய்க்கு இவர் பெரியப்பா முறை. பேண்ட், டி-ஷர்ட் என மாடர்னாக இருந்த அவர் பார்ப்பதற்கு விஜய் போலவே இருந்தார்.
எதற்காக இந்தத் தேவாலயத்திற்கு விஜய் அப்பா திடீரென்று வந்தார்? அதற்கும் காரணம் இருக்கிறது. விஜய்யின் தாத்தா சேனாதிபதி பிள்ளையின் கல்லறை இங்கேதான் உள்ளது. அது பல காலமாகக் கவனிக்கப்படாமல் சிதைந்து கிடந்தது. ஆகவே, அதனைச் சீர்படுத்திப் புதுப்பிக்க அவரது குடும்பத்தினர் திட்டமிட்டனர். அதன்படி அதை இப்போது புதியதாகக் கட்டியுள்ளனர்.
ஆகவே, அதனை வழிபட குடும்பத்துடன் எஸ்.ஏ.சி அந்தக் கல்லறைக்குச் சென்றிருந்தார். அங்கே, எஸ்.ஏ.சி குடும்பத்தினரைப் பார்த்த மக்கள் கூட்டமாகக் கூடிவிட்டனர். அங்கே குவிந்த அத்தனை ஊர் மக்களுக்கும் எஸ்.ஏ.சி குடும்பத்தினர் சார்பில் பிரியாணி விருந்து வைக்கப்பட்டது.
இந்தக் கிராமத்திற்கு முதன்முதலாக விஜய்யின் கொள்ளுத்தாத்தா குடியேறியுள்ளார். அதனையடுத்து கடந்த 4 தலைமுறைகளாக இதே கிராமத்தில் தான் விஜய்யின் குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர். விஜய்யின் பெரியப்பா ராஜசேகரன் பேசும்போது, “விஜய்க்கு நான் தான் பெரியப்பா. நானும் சென்னையில் தான் வசித்து வருகிறேன். நான் பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் இஞ்ஜினியராக பணியாற்றினேன். ஓய்வு பெற்ற பிறகு 6 ஆண்டுகள் சவுதி அரேபியாவில் வேலை பார்த்தேன்.
அதன்பிறகு மீண்டும் தமிழ்நாட்டுக்குத் திரும்பினேன். இப்போது எனது மனைவியுடன் நீலாங்கரையில் உள்ள ஒரு ஹோம்மில் வாழ்ந்து வருகிறேன். எனக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர். அந்த 3 பேரும் வெளிநாடுகளில் வசிக்கிறார்கள். என் அப்பாவின் கல்லறையைப் புதுப்பித்துள்ளோம். அதற்காக வழிபாட்டுக்காக வந்துள்ளோம். கல்லறையை மந்திரித்து அனைவருக்குப் பிரியாணி விருந்து வைத்து அதைப் பார்த்துச் சந்தோசப்படுவதற்காக வந்துள்ளோம்” என்கிறார் விஜய்யின் பெரியப்பா ராஜசேகர்.
விஜய்யின் தோற்றத்தில் அப்படியே உள்ளதாக யாரேனும் உங்களிடம் சொல்லி இருக்கிறார்களா? என்று கேட்டதற்கு, “நிறையப் பேர் சொல்லி இருக்கிறார்கள். இப்போது நீங்களும் சொல்லுகிறீர்கள்” என்கிறார் புன்னகைத்தபடி.
தனது பூர்வீக கிராமத்திற்கு வந்திருந்த எஸ்.ஏ.சி., "பூர்வீகம் என்றால் எது? அப்பா, தாத்தா, பாட்டன், பூட்டன் வாழ்ந்த ஊரைத்தான் பூர்வீகம் என்று சொல்வார்கள். அப்படிப் பார்த்தால் எனக்கு இந்த முத்துப்பேட்டைதான் பூர்வீக கிராமம். இங்கேதான் என் அப்பா கல்லறை இருக்கிறது. அவர் பெயர் சேனாதிபதி பிள்ளை. எனக்கு மூத்தவர் தான் ஜேம்ஸ் ராஜசேகர். அடுத்த அண்ணன் பெயர் ஜேம்ஸ் தனசேகர். இவர் மறைந்து விட்டார். நான் தான் மூன்றாவது பிள்ளை. எனக்கு ஒரு தங்கை உண்டு. ஆனால், அவர் இப்போது இல்லை.
இந்த ஊரில் இப்போது எனக்குத் தெரிந்த ஒருவர்தான் இருக்கிறார். அவர் பெயர் ஜேம்ஸ். எங்கள் அம்மா பள்ளி ஆசிரியை. அப்பா ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டர் ஆக வேலை பார்த்தார். ஆகவே 2 வருடத்திற்கு ஒருமுறை அவர் பணி மாற்றம் ஆகிக்கொண்டே இருப்பார். எனவே நான் ராமநாதபுரத்தில் படித்திருக்கிறேன். மானா மதுரையில் படித்திருக்கிறேன். திருப்பாச்சேத்தியில் படித்திருக்கிறேன். திடீர் என்று ராமன் கோட்டைக்கு மாறுதல் ஆனார் அப்பா. அங்கேயும் போய் படித்திருக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
விஜய் இந்தக் கிராமத்திற்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்குப் பதிலளித்த எஸ்.ஏ.சி., “அவர் நினைத்தால் வருவார். அவரது தாத்தா கல்லறை இங்கேதான் உள்ளது என்பதை நினைத்துப் பார்த்து அங்கே போகவேண்டும் என நினைத்தால் விஜய் வருவார். அதற்கு அவர் நினைக்க வேண்டும் இல்லையா?” என்கிறார்.
அவரது அண்ணன் ராஜசேகரின் தோற்றம் விஜய் போலவே உள்ளது பற்றிக் கேட்டதற்கு, "பார்க்க விஜய் போல இருக்கிறாரா? அப்படி என்றால் நாங்கள் அனைவரும் ஒரே ரத்தம்" என்கிறார். விஜய்யின் தாத்தா இந்தக் கிராமத்திற்கு வருவதற்கு முன்னால் அவரது தந்தை மதுரை வைகை ஆற்றுக் கரையோரம் உள்ள ஏழூர் கிராமத்தில் பிறந்து வாழ்ந்து வந்துள்ளார் என்பது கூடுதல் செய்தி.












Click it and Unblock the Notifications