பெண் எஸ்.ஐ மீது கை வைத்து தள்ளிய பாஜக நிர்வாகி.. தட்டித் தூக்கி சிறையில் வைத்த ராமநாதபுரம் போலீஸ்!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜக சார்பில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றபோது, போலீசார் அவர்களை கைது செய்தனர். அப்போது பெண் சார்பு ஆய்வாளர் மீது கை வைத்து தள்ளிய பாஜக நிர்வாகி சண்முகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை கண்டித்து தமிழக பாஜக மகளிரணி சார்பில் மதுரையில் இருந்து சென்னைக்கு நீதி யாத்திரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மதுரையில் நேற்று பேரணியை தொடங்க திட்டமிட்டனர். இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

தடையை மீறி பாஜகவினர் பல இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் தடையை மீறி பேரணியாகச் செல்ல முயன்ற பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு, பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, பாஜக மாநில மகளிரணி தலைவர் உமா ரவி உட்பட பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல, நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் பாஜகவினர், காவல்துறையினரின் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த கைது நடவடிக்கையின் போது பெண் சார்பு ஆய்வாளர் மீது பாஜக அரசு தொடர்பு துறை மாவட்ட செயலாளர் சண்முகநாதன் கை வைத்து தள்ளியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, பாஜக நிர்வாகி சண்முகநாதன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
