பசும்பொன்னில் ஸ்டாலின் - எடப்பாடி.. முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் நேரில் மரியாதை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை நடைபெற உள்ளது. முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செய்தார். அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
சுதந்திர போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர். தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று வீர முழக்கம் இட்டவர். இளம் வயதிலேயே பெற்ற தாயை இழந்து இஸ்லாமிய தாய் ஆயிஷாபீவியால் வளர்க்கப்பட்டவர்.

பிரிட்டிஷ்காரர்களின் ஆட்சிக்காலத்தில் அவர்களை எதிர்த்து போராடியவர். குறிப்பாக சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்திற்கு தமிழகத்தில் இருந்து பெரும் படையினைத் திரட்டி அனுப்பினார். அரசியலிலும் ஜொலித்தார்.
1939-ஆம்ஆண்டு ஜூன் 22, அகில இந்திய பார்வர்டு கட்சியை நிறுவி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸூடன் இணைந்து செயல்பட்டார். 1952ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் அருப்புக் கோட்டை பாராளுமன்ற தொகுதியிலும், முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிட்டு, இரண்டிலும் வெற்றி பெற்றவர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் தேவர் ஜெயந்தி விழாவாக தமிழ்நாடு அரசால் ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவரது 117வது பிறந்த நாள் மற்றும் 62-வது குருபூஜை இன்று நடைபெற உள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் அவரது பிறந்தநாள் மற்றும் குருபூஜை விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இவ்விழாவில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு ராமநாதபுரம் மாவட்டம். பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார்கள். அந்த வகையில் இன்று பசும்பொன் நினைவிடத்தில் தங்க கவச உடை முத்துராமலிங்க தேவர் இருந்தார். முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்.
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்துக்கு மாலை அணிவித்தும், மலர்தூவியும் ஸ்டாலின் மரியாதை செலுத்தினர். முதல்வர் முக ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் ஐ பெரியசாமி, ராஜகண்ணப்பன், தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் இருந்தனர். அவர்களும் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
முன்னதாக நினைவிடத்தில் 1 கோடியே 55 இலட்சத்து 34 ஆயிரம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முத்துராமலிங்கத் தேவர் அரங்கத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, திறந்து வைத்தார். அந்த நினைவு அரங்கை இன்று முதல்வர் ஸ்டாலின் நேரில் பார்த்தார்.
அதேபோல் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியும் இன்று பசும்பொன் சென்று முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்பி உதயக்குமார், செல்லூர் ராஜூ, எம்எல்ஏக்கள் சென்றனர். மேலும்அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவை வழிநடத்தி வரும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் இன்று பசும்பொன் சென்று மரியாதை செலுத்தினார்.
இன்று ஒரே நாளில் பசும்பொன்னுக்கு முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் என்று ஏராளமான அரசியல்கட்சி தலைவர்கள் சென்றதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
முன்னதாக இன்று காலையில் பசும்பொன் புறப்பட்டபோது மதுரை, கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலை மற்றும் மதுர தெப்பக்குளத்தில் உள்ள மாமன்னர் மருது சகோதரர்கள் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அமைச்சர்கள் ஐ பெரியசாமி, மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications