வஞ்சிரத்தை கொஞ்சுறோம்.. நிறைவடைந்த மீன்பிடி தடைக் காலம்! உற்சாகத்துடன் வங்கக் கடலில் மீனவர்கள்
இராமநாதபுரம்: வங்க கடலில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட 61 நாள் தடைக்காலம் இன்று நிறைவடைந்தது. இதனை அடுத்து ஆழ்கடலுக்குள் சென்னை காசிமேட்டிலிருந்து, இராமேஸ்வரம் வரையுள்ள வங்கக் கடல் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
மீன்களின் இனப்பெருக்கத்திற்காக தமிழகம் முழுவதும் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14ஆம் தேதி வரை 61 நாள் மீன்பிடி தடைக்காலம் விதிக்கப்படும்.

இவ்வாறு தடைக்காலம் விதிக்கப்படும் நாட்களில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை தமிழக அரசு கருத்தில் கொண்டு மீனவர் அடையாள அட்டை வைத்திருக்கும் ஒரு குடும்பத்திற்கு சுமார் 8000 ரூபாய் நிவாரண நிதி வழங்கி உள்ளது
மீன்பிடி தடைக் காலம்: இவ்வாறு இந்த ஆண்டு மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15ஆம் தேதி துவங்கி ஜூன் 14ஆம் தேதி நள்ளிரவு நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று சுமார் 2500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.
மேலும் பிடித்து வரும் மீன்களை பதப்படுத்துவதற்காக ஐஸ்பெட்டிகளில் ஐஸ் கட்டிகள் நிரப்புவது, படகுகளை இயக்குவதற்கு தேவைப்படும் டீசல் பெட்ரோல் பங்கில் நிரப்புவது மற்றும் மீன்பிடிக்க தேவைப்படும் உபகரணங்களை படகுகளில் அடுக்குவது உணவுகள் தயார் செய்வதற்கான பொருட்களை படகுகளில் சேகரிப்பது உள்ளிட்ட பணிகளில் நேற்றே ராமேஸ்வரம் மீனவர்கள் ஈடுபட்டனர்.
தடைக்காலம் நிறைவு: சுமார் 61 நாள் தடைக்காலத்திற்கு பின் ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வரும் சூழ்நிலையில் இலங்கை கடற்படை பிரச்சனை ஏதேனும் இருக்குமோ என்ற ஒரு வித அச்சத்துடனும் பயத்துடனும் தற்போது ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர். அதே நேரத்தில் தடைக் காலத்திற்கு பிறகு மீன்பிடிக்கச் செல்வதால் அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என நம்பிக்கையுடன் கடலுக்குள் சென்றுள்ளனர்.
களைகட்டிய காசிமேடு: இதேபோல் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான பைபர் மற்றும் விசைப்படகுகளில் மீன்பிடி தடைக்காலத்திற்கு பிறகு மீனவர்கள் வங்க கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்வதால் வஞ்சிரம் கொடுவா ஷீலா உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் அதிக அளவில் கிடைக்கும் என நம்புகின்றனர். மீன்பிடி தடைக்காலம் காரணமாக ஏற்கனவே இருப்பில் வைத்திருந்த மற்றும் சிறு பைபர் படல்களில் கரைவலை மூலம் கிடைத்த மீன்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது.
மீன் பிரியர்கள் உற்சாகம்: தற்போது ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு மீனவர்கள் சென்றுள்ளதால் இவ்வளவு நாள் காத்திருந்த மீன் பிரியர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் இதுவரை உச்சத்தில் இருந்த உயர் வகை மீன்களின் விலை இன்னும் வரும் நாட்களில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மத்தி, பாறை, இறால், கடமா உள்ளிட்டவையும் மீன்பிடி தடைக்காலத்துக்குப் பிறகு அதிக அளவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தடைக் காலம் எதற்கு?: ஏப்ரல் மற்றும் மே ஜூன் மாதங்களில் தான் கடலில் மீன்கள் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்கின்றன. இதனால் ஆழ்கடலில் விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன் பிடிக்கும் போது அவற்றின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும். இதன் காரணமாகவே இந்த நாட்களில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருகிறது. குறிப்பிட்ட அந்தக் காலத்தில் மீனவர்களுக்கு வருமானம் இல்லாவிட்டாலும் அதனை ஈடு செய்யும் வாடகையில் ஜூன் முதல் ஜனவரி வரையிலான காலகட்டங்களில் அதிக அளவில் மீன்கள் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications