திருவாடானையில் இனி திமுக தான் நிற்கும்! காங்கிரஸ்க்கு கொடுப்பதாக இல்லை! பற்ற வைத்த ராஜகண்ணப்பன்!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியில் இனி திமுக தான் போட்டியிடும் என்றும் கூட்டணிக் கட்சிக்கு கொடுக்க மாட்டோம் எனவும் பேசி பரபரப்பை பற்ற வைத்துள்ளார் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்.
திமுக கூட்டணியில் திருவாடானை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து ஒதுக்கப்பட்டு வரும் நிலையில், அமைச்சர் ராஜகண்ணப்பன் இவ்வாறு பேசியிருக்கிறார். திருவாடானை தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கரு.மாணிக்கம் மீதான அதிருப்தி காரணமாக அமைச்சர் இப்படி பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.

திருவாடானை தொகுதியை பொறுத்தவரை கரியமாணிக்கம், கே.ஆர்.ராமசாமி, கருமாணிக்கம், என ஒரே குடும்பத்தை சேர்ந்த தாத்தா, அப்பா, மகன் என மூன்று தலைமுறையை சேர்ந்தவர்கள் கடந்த 10 தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்துள்ளனர். இப்போதைய காங்கிரஸ் எம்.எல்.ஏ. கரு மாணிக்கத்தின் தாத்தா கரியமாணிக்கத்துக்கு தொகுதியில் ஒரு காலத்தில் தனிப்பெரும் செல்வாக்கு இருந்தது.
இப்படி பரம்பரை பரம்பரையாக திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்து வரும் இவர்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சி சார்பில் கைச் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர்கள். இந்நிலையில் திருவாடானையில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்ற நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. மாணிக்கம் வரவில்லை எனத் தெரிகிறது. அந்தக் கடுப்பில் மைக் பிடித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், திருவாடானை தொகுதி நல்ல தொகுதி என்றும் நல்லவர்களுக்கு ஓட்டுப்போட மக்கள் தயங்கவே மாட்டார்கள் எனவும் பேசினார்.
இனி இந்தத் தொகுதியை கூட்டணிக்கு கொடுப்பதாக இல்லை, நாங்க தான் போட்டியிடுவோம் எனக் கூறி காங்கிரஸ் கட்சியை அதிர வைத்துள்ளார். தமிழ்நாட்டிற்கு வேறு எந்த மாவட்டத்திற்கும் இல்லாத வகையில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தான் ரூ.2,012 கோடி முதலமைச்சர் வழங்கியிருக்கிறார் என்றும் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. வருகிறார் வரவில்லை என்பதை பற்றியெல்லாம் தாம் கவலைப்படமாட்டேன் எனவும் அமைச்சர் ராஜகண்ணப்பன் கூறினார்.
தாங்கள் ஆட்சியில் இருப்பதால் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வேண்டியது தங்கள் கடமை என்றும் இதனால் தான் கரூர் மாவட்டம் நஞ்சை புகளூரிலிருந்து எக்ஸ்குளூசிவாக ராமநாதபுரம் மாவட்டத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்படுவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications