ராமநாதபுரம் அருகே கடலில் மிதக்கும் மர்ம பொருள்.. விண்வெளி ஆராய்ச்சி மைய உதவியை நாடும் கடலோர போலீஸ்
ராமநாதபுரம்: அந்த மர்மப்பொருளை தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து மீன்வளத்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு மீனவர்கள் அனுப்பினர். இதனிடையே தொண்டி அருகே கடலில் மிதந்தது ஏவுகணை உதிரிபாகம் என்பது தெரியவந்தது. அதனை மீட்பதில் சிக்கல் இருப்பதால் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் உதவியை கடலோர பாதுகாப்பு போலீசார் நாடி உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே திருப்பாலைக்குடி கடற்கரையில் இருந்து சுமார் 6 கடல் மைல் தூரத்தில் மர்மப்பொருள் ஒன்று மிதக்கிறது. அந்த மர்மப்பொருள் குறித்து மீனவர்கள் மீன்வளத்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு புகைப்படம் எடுத்து அனுப்பினர். அவர்கள் நடத்திய விசாரணையில் ஏவுகணை உதிரிபாகம் என்பது தெரியவந்தது. அந்த உதிரிபாகத்தை மீனவர்கள் நெருங்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இந்நிலையில் நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் சிலர் தேவிபட்டினம்-முத்துநகர் இடையே 3 கடல் மைல் தூரத்தில் அந்த ஏவுகணை உதிரிபாகம் கடலில் மிதந்து கொண்டிருப்பதை மறுபடியும் பார்த்தனர். பின்னர் அவர்கள் உடனடியாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்கள்.
அதன்பேரில் தேவிபட்டினம், தொண்டி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து படகுகளில் விரைந்து சென்று கடலில் மிதந்து கொண்டிருந்த ஏவுகணை உதிரிபாகத்தை பார்வையிட்டார்கள் பின்னர் அதில் எழுதப்பட்டிருந்த எழுத்துகள், எண்களை படம்பிடித்தனர். மேலும் இந்த ஏவுகணை உதிரிபாகத்தை மீட்டு கரைக்கு கொண்டு வரலாமா? அதனால் ஆபத்து ஏதும் நேரிட வாய்ப்பு உள்ளதா? இது எந்த வகையான பொருள் என்பதை ஆய்வு செய்து விளக்கம் அளிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் அறிக்கை அனுப்பினார்கள்.
அத்துடன் கடலில் மிதந்து கொண்டிருக்கும் ஏவுகணை உதிரிபாகத்தை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மீட்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அந்த உதிரி பாகம் 15 அடி உயரத்திற்கு மேலாகவும், அதிக எடை உள்ளதாகவும் இருப்பதால் சிறிய பைபர் படகு மூலம் அதனை படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வர அவர்களால் முடியவில்லை. விசைப்படகு மூலம் கட்டி கரைக்கு இழுத்து வரவும் சாத்தியமில்லை என தெரிவித்தனர்.
எனவே, தேவிபட்டினம் அருகே குறைந்த தூரத்தில் கடலில் மிதந்து கொண்டிருப்பதால் இன்று தேவிபட்டினம்-தொண்டி இடையே உதிரிபாகம் கரை ஒதுங்கலாம் என நம்பப்படுகிறது. இதனிடைய கடலில் மிதந்து வரும் ஏவுகணை உதிரிபாகத்தை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் அதிலிருந்த எழுத்து மற்றும் எண்களை ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் அறிய முயன்றனர். அதன்படி ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் அதுகுறித்து பதிவிட்டபோது "இது ஒரு ராக்கெட் மோட்டார் கேஸ் அல்லது ஒரு ஏவுகணை வாகன உந்துவிசை அமைப்பின் ஒரு அங்கமாக இருக்கலாம், குறிப்பாக உந்துதல் திசையின் கட்டுப்பாட்டுடன் தொடர்புடையது" என்று கூறப்பட்டுள்ளது. இது இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. போன்ற ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் ஒரு பொறிமுறை என்பதும் தெரிய வந்தது.












Click it and Unblock the Notifications