பரமக்குடியில் குடும்பமே இல்லை.. கணவன் இறந்ததை தாங்காமல் மனைவியும் மரணம்.. தவிக்கும் 3 வயது குழந்தை
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வேலை செய்த போது மாடியில் இருந்து தவறி விழுந்து எலக்ட்ரீசியன் உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மனைவி விபரீத முடிவெடுத்து தற்கொலை செய்து கொண்டார். இதன் காரணமாக பெற்றோரை இழந்து 3 வயது குழந்தை பரிதவித்து வருகிறது.
இளம் வயதில் கணவனை மனைவி விபத்துகளில் பறிகொடுப்பது கொடுமையான நிகழ்வு. அப்படிய ஒரு கொடுமையான நிகழ்வினை பரமக்குடியைச் சேர்ந்த பெண்ணுக்கு நடந்துள்ளது. ஆனால் அதற்காக அந்த பெண் செய்தது உச்சகட்ட கொடுமையானது. கணவன் இறந்த துக்கத்தில் அவரும் இறந்து போய் இருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நேரு நகரை சேர்ந்தவர் கற்பூரம் என்ற சுதாகருக்கு 36 வயது ஆகிறது. . இவருடைய மனைவி தாரணி காமாட்சிக்கு 29 வயது ஆகிறது. இந்த தம்பதிக்கு ஹர்ஷித் என்ற 3 வயது ஆண் குழந்தை இருக்கிறான்.
சுதாகர் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த சுதாகரன் கமாட்சி தம்பதியின் வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு விபத்து குடும்பத்தை அழித்துள்ளது. அந்த துயரம் யாருக்குமே வரக்கூடாது. மனதை நொறுங்க வைத்துள்ளது.
கடந்த திங்கள்கிழமை மாலை பரமக்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு வீட்டின் ஜன்னலில் கொசுவலை அடிக்கும் வேலையில் சுதாகர் ஈடுபட்டிருந்தார். அப்போது முதல் மாடியிலிருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் தலையின் பின்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதனால் அவரை உடனே மதுரையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுதாகர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கணவர் சுதாகர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போதில் இருந்தே பெரும் அதிர்ச்சியில் இருந்தார் தாரணி காமாட்சி. உறவினர்களும் குடும்பத்தினரும் அவருக்கு ஆறுதல் கூறி அவரை தேற்ற முயன்றனர். ஆனால் கணவன் இறந்த செய்தி கேட்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். இதனால் விபரீத முடிவெடுத்து தாரணி காமாட்சியும் செவ்வாய்கிழமை அன்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒரே நாளில் கணவன் மற்றும் மனைவி இருவரையுமே பறிகொடுத்த குழந்தை ஹர்ஷித்தை பார்த்து உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பெற்றோரை இழந்து தவிக்கும் அந்த குழந்தையை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைத்து விடும்.
கணவர் இறந்த மறுநாளே மனைவியும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரமக்குடியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து பரமக்குடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
தயவு செய்து தற்கொலை எண்ணம் வேண்டாம். எந்த நிலையிலும் தற்கொலை எண்ணத்தை வளர்க்காதீர்கள். தற்கொலை எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை- தற்கொலை எண்ணம் என்பது சில நிமிடங்களே இருக்கும். அந்தநேரம் தயவு செய்து தமிழக அரசின் 104 என்ற எண்ணிற்கு அழைத்து பேசுங்கள். அல்லது சினோகா தற்கொலை தடுப்பு மையத்தின் தொலைபேசி எண்ணான (சினேகா ஃபவுண்டேஷன்) - 044- 24640050 க்கு அழையுங்கள்.
தற்கொலை தடுப்பு உதவி மைய எண்கள்:
சினேகா ஃபவுண்டேஷன் - 044- 24640050
தமிழக அரசு உதவி மைய எண் - 104












Click it and Unblock the Notifications