பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பிரதமர் மோடியின் சகோதரர் - பாஜகவினர் உற்சாக வரவேற்பு!
ராமநாதபுரம்: பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் பிரதமர் மோடியின் சகோதரர் தாமோதர தாஸ் பங்கஜ மோடி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே இளஞ்செம்பூர் கிராமத்தில் பாஜக மாநில இளைஞரணி செயலாளர் மருத்துவர் ராம்குமார்- தமிழ்வாணி ஆகியோருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. திருமணமான புதுமண தம்பதியினரை பிரதமர் நரேந்திர மோடியின் சகோதரர் தாமோதர தாஸ் பங்கஜ மோடி, இளஞ்செம்பூர் கிராமத்துக்கு நேரில் சென்று வாழ்த்தி ஆசீர்வதித்தார். புதுமண தம்பதியினர் பங்கஜ மோடி காலில் விழுந்து வாழ்த்து பெற்றனர்.

பின்னர் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்கு அவர் சென்றார். அங்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலையின் பாதங்களை தொட்டு அவர் வணங்கினார்.
பாஜக மாவட்ட கவுன்சிலர் செல்வி ராமபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, மாலை, சால்வை அணிவித்து பங்கஜ மோடியை உற்சாகமாக வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியின்போது இயற்கை முறையில் தயாரித்த பனங்கருப்பட்டியை பங்கஜ மோடிக்கு வழங்கினர்.
முன்னதாக கடந்த 2019-ம் ஆண்டு பங்கஜ மோடி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினார். அப்போது மூத்த அதிமுக தலைவர் தம்பிதுரை பங்கஜ மோடியை வரவேற்று மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications