ராமதாஸ்- அன்புமணி மோதல்! ராமேஸ்வரம் நம்புநாயகி கோயிலில் மகள்களுடன் மஞ்சள் அரைத்து வழிபட்ட சவுமியா
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் உள்ள நம்புநாயகி திருக்கோவிலில் தனது மகள்களின் கையால் விரலி மஞ்சள் அரைத்து அம்மனுக்கு சாத்திய சவுமியா அன்புமணி, கட்சியின் சின்னமான மாம்பழத்தையும் வைத்து மனமுருகி வேண்டினார். பாமகவில் தற்போது மாமனாருக்கும் கணவருக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ள நிலையில் சவுமியா பிரார்த்தனை செய்துள்ளார்.
ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதஸ்வாமி திருக்கோவில் புனித தலமாக விளங்குகிறது. இங்கு ஸ்ரீராமரே தனது மனைவி சீதாதேவியை எப்படியாவது இலங்கையில் இருந்து மீட்க வேண்டும் என வேண்டிக் கொண்ட தலம் என்கிறார்கள்.

இந்த ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்த கடலில் குளித்து முடித்து 22 கிணறுகளின் நீரில் புனித நீராடி பின்னர் ராமநாதஸ்வாமி கோயிலுக்கு செல்ல வேண்டும். ஒரு வேளை திதி கொடுப்பது என்றாலும் திதி கொடுத்துவிட்டு, இந்த தீர்த்தங்களில் குளித்து விட்டு பின்னர் ராமநாதரை வழிபடலாம்.
8 கிலோ மீட்டர்
அந்த வகையில் இங்கிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் நம்புநாயகி திருக்கோயில் உள்ளது. அதாவது ராமநாத சுவாமி ஆலயத்தில் பரம்பரை பரம்பரையாக அர்ச்சகர்களாக இருக்கும் மராட்டிய அந்தணர்களுக்கு குலதெய்வமாக விளங்குகிறாள். அத்துடன் ராமேஸ்வரத்தில் உள்ள பெரும்பாலான மக்களின் குலதெய்வமாகவும் இந்த அன்னை விளங்குகிறாள்.
600 ஆண்டுகளுக்கு முன்பு
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு ராமேஸ்வரம் தீவில் உள்ள இந்த பகுதி, தாழை மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. அப்போது விறகு வெட்டும் நபர்கள் ஒரு மரத்தை வெட்டிய போது அதிலிருந்து ரத்தம் கொட்டியது. அப்போது ஒருவருக்கு அருள் வந்தது.
தாழைவன அம்மன்
அவர், இந்த பகுதியில் நான் தாழைவன அம்மனாக பூமியில் மறைந்துள்ளேன். என்னை வெளியே எடுத்து கோவில் அமைத்து வழிபடுங்கள். நான் உங்களைக் காத்தருள்வேன். என்னை நம்புங்கள் என்றாராம். அப்படி வந்தவர்தான் இந்த நம்பு நாயகி அம்மன்.
மஞ்சள் அரைத்து
இங்கு அம்மனுக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தால் வேண்டுதல் நிறைவேறும் என்கிறார்கள். அந்த வகையில் இந்த கோயிலுக்கு தனது மகள்கள் சஞ்சுத்ரா, சம்யுக்தா ஆகியோருடன் சவுமியா அன்புமணி வருகை தந்தார்.
விரலி மஞ்சள்
அங்கு விரலி மஞ்சளை தனது மகள்களின் கையால் அம்மியில் அரைக்க வைத்தார். பின்னர் அந்த மஞ்சளை ஒரு இலையில் எடுத்துக் கொண்டு சன்னதியினுள் சென்றார். அங்கு குருக்களிடம் அந்த மஞ்சளை கொடுத்தார்.
அர்ச்சனை
பின்னர் சுவாமிக்கு தேவையான மாலை, பூ, அர்ச்சனை பொருட்களை கொடுத்த சவுமியா, தனது கட்சியின் சின்னமான மாம்பழத்தையும் அம்மன் பாதத்தில் வைத்து வழிபட்டார். அப்போது மகள்களும், சவுமியாவும் கண்களை மூடி பிரார்த்தனை செய்தனர்.
உள்கட்சி பிரச்சினை
அதாவது பாமகவில் உள்கட்சி பிரச்சினை நிலவுகிறது. அன்புமணிக்கும் ராமதாஸுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. அன்புமணி தலைவர் பதவியை கோருகிறார். ஆனால் பறிக்கப்பட்டது பறிக்கப்பட்டதுதான் என ராமதாஸ் தெரிவிக்கிறார்.
அன்புமணியின் செயல்பாடுகள்
அன்புமணியின் செயல்பாடுகள் சரியில்லை. பெண்களை அரசியலுக்குள் கொண்டு வந்துள்ளார். இது எனக்கு பிடிக்கவில்லை. வாரிசு அரசியல் எனக்கு பிடிக்கவில்லை என ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் ராமதாஸ், அன்புமணியை செயல்தலைவர் என அடிக்கடி கூறுவதும், அன்புமணியோ தன்னை பாமக தலைவர் என கூறுவதும் வாடிக்கையாகிவிட்டது.
ராமதாஸ் ஆதரவாளர்கள்
அது போல் ராமதாஸ் ஆதரவாளர்களை கட்சித் தலைவர் என்ற முறையில் அன்புமணி நீக்கிவிட்டு புதியவர்களை போடுவதும், அது போல் அன்புமணி ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்கிவிட்டு புதியவர்களை நியமிப்பதுமாக இருக்கிறது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், இவர்களுக்குள் சண்டை என்பது கட்சியின் வளர்ச்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களின் எண்ணமாக உள்ளது.
எப்போது முடியும்
இதனால் கட்சி நிர்வாகிகள் இருவரையும் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதும், குடும்பத்தினர் இது போல் பூஜை புனஸ்காரம் என செய்வதுமாக இருக்கிறார்கள். இந்த பஞ்சாயத்து எப்போது முடிவுக்கு வருமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications