பெரிய மீசை -பெரிய கிருதா என கட்டிளம் காளையாக வலம் வந்த ஐ.பெரியசாமி! ஸ்டாலின் சொன்ன ஃபிளாஷ்பேக்!
ராமநாதபுரம்: அமைச்சர் ஐ.பெரியசாமியை பொறுத்தவரை, ஒரு காலத்தில் பெரிய மீசை -பெரிய கிருதாவுடன் கட்டிளம் காளையாக வலம் வந்தவர் என முதலமைச்சர் ஸ்டாலின் ஃபிளாஷ்பேக் கதை கூறியிருக்கிறார்.
ராமநாதபுரத்தில் நடைபெற்ற தென் மண்டல திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் பேசிய போது தான் ஸ்டாலின் இதனைக் கூறினார். மேலும், இளமை திரும்புதே என ரஜினிகாந்த் பாடலுக்கேற்ப அமைச்சர் ஐ.பி. குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;

''இளைஞர் அணிக்கு நான் பொறுப்பேற்று, தமிழ்நாடு முழுவதும் சுற்றிக் கழகக் கொடியேற்றிக் கொண்டு இருந்த காலத்தில் திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் கொடியேற்றிப் பேசினேன். அப்போதுதான் நம்முடைய ஐ.பி அவர்களை நான் பார்த்தேன்.
பெரிய மீசை - பெரிய கிருதா என்று கட்டிளம் காளையாக வலம் வந்தார். இப்போது மீசை, கிருதாவோடு தாடியும் சேர்ந்துவிட்டது. வெள்ளி போன்ற தாடி, தலை நரைத்தாலும் கழகப் பணிக்கு நரையில்லை, தளர்வில்லை என்று பணியாற்றி வருகிறார் நம்முடைய ஐ.பி.

தென் பாண்டி மண்டலத்தில் வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று சொன்னவுடனே இராமநாதபுரத்தில் நடத்தலாம் என்று எல்லோரும் ஒருமனதாக முடிவெடுத்தோம். அது சரியான முடிவுதான் என்று இங்கு கூடியிருக்கும் நீங்கள் நிரூபிக்கிறீர்கள். இது போலவே தேர்தல் களத்திலும் சரியான முடிவுகள் கிடைக்கச் செய்வீர்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.
அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தோளோடு தோள் நின்ற - துணை நின்ற அமைச்சர் ராஜ கண்ணப்பன் அவர்களுக்கும் - இராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றி.இவர்கள் இரண்டு பேரும் ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் போட்டி போட்டுக்கொண்டு இராமநாதபுரம் மாவட்டத்தை வளர்த்து வருகிறார்கள்.'' இவ்வாறு அவர் அமைச்சர் ஐ.பி. பற்றி பேசினார்.












Click it and Unblock the Notifications