டெண்டருக்கே 9 ஆண்டு! டெல்லியில் இருந்து மதுரைக்கு உருண்டு வரும் எய்ம்ஸ்! முதல்வர் ஸ்டாலின் கிண்டல்
ராமநாதபுரம்: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை டெண்டர் வரை சென்றுள்ளது. மருத்துவமனை அறிவிப்பு முதல் டெண்டர் வரை உருண்டு வர 9 ஆண்டு ஆகிவிட்டது என முதல்வர் ஸ்டாலின் கிண்டல் செய்த நிலையில் இதுவும் உண்மையா? இல்லை நாடாளுமன்ற தேர்தலுக்கான நாடகமா? என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினார்.
மதுரையில் 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இடம் தேர்வு செய்தது முதல் நிதி ஒதுக்குவது வரை, கடந்த 8 ஆண்டுகளாக மதுரை எய்ம்ஸ் கிடப்பில் போடப்பட்டது. இறுதியாக மதுரை தோப்பூரில் சுமார் 224.24 ஏக்கரில் ரூ.1,264 கோடியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும் பணி என்பது மொத்தமாக சுணங்கியது.

மதுரை மதுரை 'எய்ம்ஸ்' மருத்துவமனைக்கு மட்டும் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் கடன் கேட்கப்பட்டது. இதற்கான நடைமுறைகள் ஆய்வு பணிகளில் தாமதம் ஏற்பட்டது தான் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி நடக்காமல் இருந்ததற்கு முக்கிய காரணமாகும்.
இந்நிலையில் தான் 2021 சட்டசபை தேர்தலின்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 'எய்ம்ஸ்' மருத்துவமனை பணியை மத்திய அரசு செய்யவில்லை என கையில் செங்கலுடன் குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் மதுரை 'எய்ம்ஸ்' மருத்துவமனை கட்டுமானப்பணியை தொடங்காமலேயே, இந்த மருத்துவமனை கல்லுரிக்கான 50 எம்பிபிஎஸ் இடத்துக்கான மாணவர் சேர்க்கையை நடத்தப்பட்டது. இவர்களுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரியில், தற்காலிகமாக வகுப்புகளை தொடங்கியது.
இது ஒருபுறம் இருக்க மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே அடிக்கடி கருத்து மோதல்கள் ஏற்படும். சில நாட்களுக்கு முன்பு கூட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய கருத்துக்கு மா சுப்பிரமணியன் பதிலடி கொடுத்து இருந்தார். இந்நிலையில் ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனத்திடம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான நிதி கிடைக்கப்பட்டுள்ளதால் மதுரை எய்ம்ஸ் கட்டிட பணிகளுக்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இரு கட்டங்களாக பணிகள் நடைபெறும் எனவும், 33 மாதத்தில் பணிகளை முடிப்பதற்கான ஒப்பந்த காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2026ம் ஆண்டுக்குள் பணிகள் முடியும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் தான் ராமநாதபுரத்தில் இன்று திமுக தென்மண்டல வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி பட்டறை கூட்டம் நடந்தது. இதில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட மத்திய அரசு தாமதமப்படுத்தி வருவதாக கூறி அதனை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய நிதி அமைச்சராக இருந்த அருண்ஜெட்லி 2015 பட்ஜெட்டில் அறிவித்தார். ஆனால் இன்று வரை செங்கல் தான் இருக்கு. மருத்துவமனை வரவில்லை. இப்போது தான் டெண்டர் வரை சென்றுள்ளது. மருத்துவமனை அறிவிப்பு முதல் டெண்டர் வரை உருண்டு வர 9 ஆண்டு ஆகிவிட்டது.
மேலும் இது உண்மையில் நடக்கிறதா?இல்லை 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான நாடகமாக என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் இருந்து ஜிஎஸ்டியாக பல்லாயிரக்கணக்கான ரூபாயை மத்திய அரசு வசூல் செய்கிறது. இதில் ரூ.1000 கோடியை ஒதுக்கி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டித்தர வழியில்லாத சூழல் தான் உள்ளதா? இதையெல்லாம் கேட்பதால் திமுகவை, பாஜகவினர் விமர்சிக்கின்றனர்'' என அட்டாக் செய்தார்.


Click it and Unblock the Notifications
