கத்திக்குத்து வரை வந்த உட்கட்சி பஞ்சாயத்து! ஹாஸ்பிடலில் அட்மிட் ஆன திமுக கவுன்சிலர்! பரபர பரமக்குடி!
இராமநாதபுரம் : உட்கட்சி மோதல் தொடர்பாக இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர்மன்ற 5வது வார்டு திமுக கவுன்சிலர் பாக்யராஜை மர்ம நபர்கள் கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே உட்கட்சி விவகார மோதல் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரை திமுகவினர் அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையிலும், மாவட்ட செயலாளர் முத்து ராமலிங்கம் காதர் பாட்ஷா தலைமையில் இரண்டு அணியாக செயல்பட்டு வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக திரைமறைவில் இருந்த உட்கட்சி மோதல் மாவட்ட செயலாளர் அறிவிப்புக்குப் பிறகு உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் கட்சி நிகழ்ச்சிகளிலேயே அவருக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என மோதல் அரசியல் களைகட்டி வருகிறது.

இராமநாதபுரம் திமுக
மாவட்ட செயலாளராக காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு அவர் சாதி ரீதியாக செயல்படுகிறார் என அவருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான மாவட்ட செயலாளர் பட்டியலில் காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்தின் பெயரே இடம் பெற்றிருந்தது. இதனால் எதிர் தரப்பினர் கடும் அதிர்ச்சியடைந்தாலும் அதனை வெளிக் காட்டிக் கொள்ளாமல் கட்சி பணியாற்றி வருகின்றனர்.

காதர் பாட்ஷா முத்துராமலிங்கம்
இந்நிலையில், இராமநாதபுரம் வந்த மாவட்டச் செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்தை வரவேற்று பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் புகைப்படம் இல்லை என கடந்த சில தினங்களுக்கு முன்பு பரமக்குடி நகர்மன்ற 5 வது வார்டு திமுக கவுன்சிலர் பாக்யராஜை சிலர் தொலைபேசியில் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று பரமக்குடியில் உள்ள பள்ளிகளில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கவுன்சிலருக்கு கத்திக்குத்து
அதில் கலந்து கொண்டு பரமக்குடி வடக்கு நகர் செயலாளர் ஜீவ ரத்தினத்துடன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் நகர மன்ற உறுப்பினர் பாக்யராஜை தாக்கி, அவரது வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தி விட்டு சென்றனர். காயம் அடைந்த பாக்யராஜ் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போலீசார் விசாரணை
திமுக மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கத்தை கட்சித்தலைமையால் அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் சென்னையிலிருந்து ஊர் திரும்பும்போது, அவருக்கு வரவேற்பும் வாழ்த்தும் தெரிவித்து விளம்பர பதாகை வைத்ததாக சொல்லப்படுகிறது. இந்த விளம்பர பதாகையில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினரின் படத்தை அச்சிடாமல் அவரை புறக்கணித்து வைக்கப்பட்டதால், ஏற்பட்ட விரோதம் காரணமாக உட்கட்சி மோதல் வெடித்ததாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications