சவுதியில் மது விற்க அனுமதி? 73 ஆண்டுகளுக்கு பின் மதுவிலக்கு நீக்கம்? அதிகாரிகள் தந்த முக்கிய விளக்கம்
துபாய்: மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சவுதியில் கடந்த 73 ஆண்டுகளாக மதுபானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க அங்கு மதுவிலக்கை நீக்கவுள்ளதாகவும் மது விற்பனைக்கு அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இதற்கிடையே சவுதி அதிகாரிகள் இது குறித்து முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் முக்கியமானது சவுதி அரேபியா. மிகப் பெரிய அரபு நாடுகளில் ஒன்றாக இருக்கும் சவுதியில் இந்தியர்கள் உட்பட பல லட்சம் வெளிநாட்டினர் வேலை செய்கிறார்கள். அதேநேரம் இஸ்லாத்தின் பிறப்பிடமாகக் கருதப்படும் சவுதி அரேபியா கடந்த 73 ஆண்டுகளாக மது விலக்கு அமலில் இருக்கிறது.

மதுவிலக்கு நீக்கம்?
இஸ்லாமியர்கள் மது குடிக்கக்கூடாது என்பதைக் குரான் வலியுறுத்துகிறது. இதன் காரணமாகவே இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் மது விற்கவும் குடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 73 ஆண்டுகளாகவே இந்த தடை அமலில் இருக்கிறது. இதற்கிடையே மதுபான தடையை நீக்கச் சவுதி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியானது.
என்ன காரணம்?
அதாவது சவுதியில் வரும் 2034ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறுகிறது. இதற்கான பணிகள் அங்கு முழு வீச்சில் நடந்து வரும் சூழலில், மதுபான விற்பனைக்கான கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து அந்நாட்டு அதிகாரிகள் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின. 2026க்குள் படிப்படியாக மது விற்பனையை அனுமதிக்கவுள்ளதாகச் சொல்லப்பட்டன. சில சர்வதேச ஊடகங்களும் கூட இந்த செய்திகளை வெளியிட்டன.
இதன் காரணமாகவே சவுதி மதுவிலக்கை நீக்கவுள்ளதாகப் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பகிர்ந்தனர். இது சவுதியிலும் கூட மிகப் பெரிய விவாதத்தைக் கிளப்பியது. இஸ்லாம் மதத்தின் இரு பெரும் புனித தலங்களான மெக்கா மற்றும் மதீனா ஆகிய இரண்டுமே சவுதியில் தான் இருக்கிறது. இதனால் சவுதியில் மதுபான விற்பனைக்கு அனுமதி தரவே கூடாது எனப் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சவுதி விளக்கம்
இந்தச் சூழலில் தான் சவுதி அதிகாரிகள் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளனர். சவுதியில் மதுபானத்திற்கு அனுமதி கொடுக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தற்போதுள்ள மதுவிலக்கு தொடரும் என்றும் சவுதி அதிகாரிகள் தெரிவித்தனர். முன்னதாக கடந்தாண்டு கத்தாரில் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடந்த போது, அங்கும் மது விற்பனைக்குத் தடை இருந்தது குறிப்பிடத்தக்கது.
சீர்திருத்த நடவடிக்கைகள்
சவுதியைப் பொறுத்தவரை இப்போது பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மான் தான் ஆட்சி அதிகாரத்தைக் கவனித்து வருகிறார். இப்போது உலகில் கச்சா எண்ணெய் தேவை குறைந்து வருவதால், மற்ற துறைகளில் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் பின் சல்மான் இறங்கியுள்ளார். குறிப்பாகச் சுற்றுலா மற்றும் வணிகத்தில் டெலவப் செய்ய முயல்கிறார். இதற்காக பல்வேறு சலுகைகளையும் அவர் அறிவித்து வருகிறார். மேலும், பல சீர்திருத்த நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.
சவுதியில் பல காலமாகப் பெண்கள் கார் ஓட்ட அனுமதி இல்லாமல் இருந்தது. கடந்த 2017ம் ஆண்டு தான் அந்த தடை நீக்கப்பட்டது. மேலும், பொது இடங்களில் இருந்த பாலின வேறுபாடுகளும் தளர்த்தப்பட்டது. மேலும், கலாச்சார காவலர்களின் அதிகாரமும் குறைக்கப்பட்டது.
மதுபானம்
மதுபானங்களைப் பொறுத்தவரைக் கடந்த ஆண்டு தலைநகர் சவுதி தலைநகர் ரியாத்தில் வெளிநாட்டுத் தூதர்களுக்கு மட்டுமே விற்கச் சிறிய மதுக்கடை திறக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை வெளிநாட்டில் இருந்து மட்டுமே தூதர்கள் தங்களுக்கான மதுவைக் கொண்டு வர வேண்டிய சூழல் இருந்தது. அந்த நிலை கடந்தாண்டு மதுக்கடை திறக்கப்பட்ட பிறகு மாறியது.
சவுதியில் மதுபானங்களுக்கு எதிராக மிகக் கடுமையான சட்டங்கள் உள்ளன. நாடுகடத்தல், அபராதம், 100+ கசையடிகளுடன் சிறைத்தண்டனை எனக் கடுமையான தண்டனைகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications