முஸ்லீம் நாடுகளுக்கு இடையே வெடித்த மோதல்.. இடியாப்ப சிக்கலாக மாறிய ஏமன்.. சவுதி vs அமீரகம் vs ஈரான்!
ரியாத்: மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஏமனில் இப்போது மீண்டும் குழப்பம் வெடித்துள்ளது. அங்கு ஐக்கிய அமீரக ஆதரவு பெற்ற குழுவின் ஆயுதக் கப்பலை சவுதி தாக்கி அழித்துள்ளது. சவுதி திடீரென இந்தத் தாக்குதலை நடத்த என்ன காரணம்.. ஏமனில் உண்மையில் என்ன சிக்கல் நிலவி வருகிறது. இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மத்திய கிழக்கு நாடுகளில் சில ஆண்டுகளாகவே அமைதியின்மை தொடர்கிறது. ஒரு பகுதியில் பிரச்சினை முடிந்தால்.. அடுத்த இடத்தில் மீண்டும் பிரச்சினை என வரிசையாக மோதல்கள் நிகழ்ந்து வருகிறது. இந்தச் சூழலில் மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் பதற்றம் வெடித்துள்ளது.

சவுதி அரேபியா
ஏமன் நாட்டில் உள்ள முக்கல்லா துறைமுக நகர் மீது சவுதி அரேபியா திடீரென வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் அப்பகுதியில் இருந்த பதற்றத்தை மீண்டும் பல மடங்கு அதிகரித்துள்ளது. தெற்கு ஏமன் மற்றும் அதைச் சுற்றியுள்ள முக்கிய வர்த்தகப் பாதைகளில் அங்கு உறுதியற்ற தன்மை அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.
ஐக்கிய அமீரக ஆதரவு பெற்ற எஸ்டிசி எனப்படும் Southern Transitional Council ஆயுதக் கப்பலைக் குறிவைத்தே இந்தத் தாக்குதலை நடத்தியதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தப் பிரிவினைவாதக் குழுவிற்குச் செல்லவிருந்த ஆயுதக் கப்பல்களையே தாக்கி அழித்ததாக சவுதி கூறுகிறது. இந்த எஸ்டிசி குழு, ஏமனில் எண்ணெய் வளம் அதிகம் உள்ள இடங்களான ஹட்ராமவுட் மற்றும் மஹ்ரா உள்ளிட்ட பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.
ஏமன்
இந்தக் குழு அப்பகுதியில் தனது ஆதிக்கத்தை அதிகரித்து வருகிறது. இதனால் சவுதி அரேபியா ஆதரிக்கும் ஏமனின் அதிகாரப்பூர்வ அரசு பலவீனமடைந்து வருகிறது. தனது ஆதரவு பெற்ற ஏமன் அரசுக்கு நெருக்கடி ஏற்படுவதைத் தடுக்கவும், தங்களுக்கு எதிரான பிரிவினைவாத குழுக்கள் ஆயுதங்களைப் பெறுவதைத் தவிர்க்கவும் சவுதி இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
சவுதிக்கு இது ஒரு முக்கிய பிரச்சினையாகும். ஹத்ரமௌத் பகுதி சவுதி எல்லையிலேயே அமைந்துள்ளது. அது ஏமனின் முக்கிய எரிசக்தி ஆதாரமாகவும் உள்ளது. அந்த இடத்தில் எஸ்டிசி ஆதிக்கம் அதிகரிக்கக் கூடாது என்பதாலேயே சவுதி தாக்குதலை நடத்தியுள்ளது. இது பிரிவினைவாதிகளுக்கு மட்டுமின்றி ஐக்கிய அமீரகத்திற்கும் கூட ஒரு எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே வளர்ந்து வரும் விரிசலை இது உலக நாடுகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
ஏமனில் நிலைமை என்ன!
ஏமனை பொறுத்தவரை முன்பே குறிப்பிட்டது போல ஐக்கிய அமீரக ஆதரவு பெற்ற தெற்குப் பகுதிகளை எஸ்டிசி கட்டப்படுத்துகிறது. ஏமனின் வடக்குப் பகுதியையும் அதன் தலைநகர் சனாவையும் கட்டுப்படுத்தும் ஈரான் ஆதரவு ஹவுதி கட்டுப்படுத்துகிறது. எஞ்சி இருக்கும் சில பகுதிகளை மட்டுமே சவுதி ஆதரவு பெற்ற அதிகாரப்பூர்வ அரசு கட்டுப்படுத்துகிறது. இதில் ஹவுதி ஆதிக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் சூழலில், அவர்களைக் கட்டுப்படுத்த சவுதியும் ஐக்கிய அமீரகமும் இணைந்து செயல்பட்டு வந்தது.
மோதல்
ஒருங்கிணைந்த ஏமன் வேண்டும் என்பதே ஏமனின் நிலைப்பாடாக இருக்கிறது. அதேநேரம் தெற்குப் பகுதி தனி நாடாக இருக்க வேண்டும் என்பது ஐக்கிய அமீரகத்தின் விருப்பம். இப்படி சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட ஏமனில் ஹவுதிக்கள் ஆதிக்கம் அதிகரித்துவிடக்கூடாது என்பதற்காக இரு தரப்பும் இணைந்தே செயல்பட்டு வந்தது. ஆனால், இப்போது நேரடியாக ஐக்கிய அமீரக ஆதரவு பெற்ற எஸ்டிசி கும்பலை சவுதி தாக்கியிருக்கிறது. இதனால் ஹவுதிக்கு எதிரான செயல்பாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications