இன்ஸ்டாகிராம் காதலனை தேடி, சென்னையில் இருந்து சேலம் பயணம்.. 13 வயது சிறுமி பகீர் சம்பவம்
சென்னையைச் சேர்ந்த 13 வயது சிறுமி தனது இன்ஸ்டாகிராம் காதலனை தேடி, சேலம் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம்: சென்னை பெரம்பூர் திருவிக நகரைச் சேர்ந்த 13 வயது சிறுமி தனது இன்ஸ்டாகிராம் காதலனை தேடி, சேலம் சென்ற நிலையில், சிறுமியை, குழந்தைகள் நல அமைப்பினர் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
நம்மை சுற்றியுள்ள டெக்னாலஜிகள் நமக்கு எந்த அளவிற்கு நன்மையை தருகின்றனவோ, அதே அளவு தீமையையும் தருகின்றன. நாம் பயன்படுத்தும் முறையை பொறுத்து அவை நன்மையாகவோ அல்லது தீமையாகவோ முடிகின்றன.
இன்ஸ்டாகிராமிற்கு அடிமையாகும் சிறுமிகள், அதில் இளைஞர்களின் வலையில் விழுந்து விடுகிறார்கள். வயது கோளாறில் காதல் வலையில் விழும் சிறுமிகள், அவர்களை தேடி பெற்றோருக்கு தெரியாமல் வீட்டை விட்டு செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இன்ஸ்டாகிராம் காதலனை தேடி சிறுமிகள் வீட்டை விட்டு வெளியேறுவது அதிகரித்துள்ளது.

திருமணம்
அதேபோல் 16 அல்லது 17 வயது உள்ள சிறுமிகள் சிலர் காதல் வலையில் விழுவதுடன், காதலனை கண் மூடித்தனமாக நம்பி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்கிறார்கள்.19 வயது அல்லது 20 வயது இளைஞர்கள் பொருளாதார பலம் இல்லாமல், வேலையும் இல்லாமல் வாழ்க்கையை புரிந்து கொள்ளாமல் சிறுமிகளை திருமணம் செய்கிறார்கள்.

காதலன்
இதனால் 20 வயதில் இளைஞன் போக்சோவிற்கு சிறைக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது. அதேபோல் 16 அல்லது 17 வயதில் குழந்தையை சுமக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த சீரழிவை தடுக்க விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல் பெண்ணின் திருமண வயதை 21 ஆக அதிகரிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. சரி விஷயத்திற்கு வருவோம்.

வீட்டுக்கு வரவில்லை
சென்னை பெரம்பூரை அடுத்த திரு.வி. க நகர் பகுதியை சேர்ந்த கோபி என்பவரது 13 வயது மகள், உடல்நிலை சரியில்லை என பள்ளியில் இருந்து பாதியிலேயே வீட்டுக்கு கிளம்பி இருக்கிறார். வெகுநேரமாகியும் வீட்டுக்கு மகள் வரவில்லை. சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள், காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

குழந்தைகள் நல அமைப்பு
இந்த நிலையில், சேலம் பகுதியில் இருந்து சிறுமியின் பெற்றோரை குழந்தைகள் நல அமைப்பினர் தொடர்பு கொண்டார்கள். காணாமல் போன சிறுமி சேலத்தில் இருப்பதாக தெரிவித்தனர். இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் மற்றும் போலீசார், சேலத்திற்கு சென்று சிறுமியை மீட்டனர்.

சிறுமி ஒப்படைப்பு
போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமி இன்ஸ்டாகிராமில் சேலத்தை சேர்ந்த ஒருவரை காதலித்துள்ளார். காதலனை பார்க்க சேலம் வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து சிறுமிக்கு அறிவுரை கூறிய போலீசார், அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தார்கள்.












Click it and Unblock the Notifications