'எல்எல்ஏ பையனுக்கு முடிச்சிடலாம்'.. ஆசைகாட்டிய புரோக்கரை நிர்வாணமாக ஓடவிட்ட விவசாயி.. 20 லட்சம் போச்சே
சேலம்: விவசாயியின் மகளை எம்எல்ஏவின் பையனுக்கு திருமணம் செய்து வைப்பதாக கூறி ரூ.20 லட்சத்தை அபேஸ் செய்த புரோக்கர் சரமாரியாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் தலைவாசல் தியாகனூர் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம். இவருக்கு திருமண வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். மகளுக்கு பல்வேறு இடங்களில் மாப்பிள்ளை பார்த்து வந்திருக்கிறார். ஆனால் எந்த மாப்பிள்ளையும் செட் ஆகவில்லை. இப்படி இருக்கையில், பெரம்பலூரை சேர்ந்த செல்லமுத்து என்பவர் இவருக்கு அறிமுகமாகியுள்ளார். செல்லமுத்து திருமணத்திற்கு வரன் பார்க்கும் வேலையை செய்து வருகிறார். எனவே தன்னுடைய பெண் குறித்த தகவல்களை செல்லமுத்துவிடம் கூறிய ஆறுமுகம், இவருக்கு ஏற்ற ஒருவரை பிடித்து கொடுக்கும்படி கேட்டிருக்கிறார்.

ஆனால் ஒரு மாதம் வரை செல்லமுத்து இதில் பெரியதாக ஆர்வம் காட்டவில்லை. இது குறித்து விசாரித்த ஆறுமுகம் புரோக்கர் கமிஷன் என்கிற வகையில் கொஞ்சம் பணம் கொடுத்திருக்கிறார். இதனையடுத்து இரண்டு மாதங்கள் கழித்து மீண்டும் ஆறுமுகத்தை சந்தித்த செல்லமுத்து, தனக்கு தெரிந்த ஒரு மாப்பிள்ளை இருப்பதாகவும் ஆனால் அவருடைய தந்தை எம்எல்ஏ எனவும் கூறியுள்ளார். மட்டுமல்லாது அவர்கள் அதிக அளவில் வரதட்சணை எதிர்பார்ப்பார்கள் என்றும் அதற்கு முன்னதாக தனக்கு ரூ.10 லட்சம் புரோக்கர் கமிஷன் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அவர் கேட்டதை போலவே ஆறுமுகம் ரூ.10 லட்சத்தை கொடுத்திருக்கிறார். இதனையடுத்து மீண்டும் செல்லமுத்து தலைமறைவாகியுள்ளார். பின்னர் ஒரு மாதம் கழித்து மீண்டும் வந்து ரூ.3 லட்சம் வாங்கி சென்றுள்ளார். இப்படியாக அடிக்கடி வந்து இரண்டு மூன்று லட்சம் ரூபாயை மட்டும் பெற்றுக்கொண்டு ஆறுமுகத்தின் வீட்டு பக்கமே வருவதையே செல்லமுத்து தவிர்த்துள்ளார். ஆறுமுகம் தொடர்புகொள்ள முயன்றபோது தனது செல்போன் நம்பரையே செல்லமுத்து மாற்றியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் செல்லமுத்துவின் வீடு தேடி சென்றிருக்கிறார். ஆனால் அவர் வீட்டில் இல்லை எனவே அவரது ஊரிலேயே காவல்நிலையத்தில் புகாரை ஆறுமுகம் கொடுத்திருக்கிறார்.
அதேபோல தனது ஊரிலும் புகாரை கொடுத்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணைக்காக செல்லமுத்துவை அழைத்துள்ளனர். ஆனால் அவர் ஆஜராகாமல் ஏமாற்றி வந்திருக்கிறார். இந்நிலையில்தான் செல்லமுத்துவை காணவில்லை என்று அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது இன்று காலை கடுமையான காயங்களுடன் பெரம்பலூர் கைகளத்தூர் பகுதியில் செல்லமுத்து மீட்கப்பட்டார். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அறுமுகத்தின் ஆட்கள் தங்களை கடத்தி தாக்கியதாக கூறினார்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், "செல்லமுத்துவுக்கு திருமணத்திற்கு வரன் பார்த்து கொடுப்பதுதுான் தொழில். இப்படி இருக்கையில் ஆறுமுகத்தின் மகளுக்கு எம்எல்ஏ பையனை வரன் பார்த்து கொடுப்பதாக கூறி ரூ.20 லட்சம் வரை பணத்தை பெற்றுள்ளார். ஆனால் அதன் பின்னர் அவர் ஆளையே காணவில்லை. நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த அவர் ஒயின்ஷாப் ஒன்றில் தனது நண்பர்களுடன் நின்றுக்கொண்டிருந்துள்ளார். இதனை ஆறுமுகத்தின் மகன் பார்த்திருக்கிறார். இதனையடுத்து அவரும் அவருடன் அவரது கூட்டாளிகளான கெங்கவல்லியை சேர்ந்த கள்ளக்குறிச்சி தொகுதி விசிக துணை செயலாளர் கருப்பையா, ஆணையம்பட்டி ராமர், வலசக்கல்பட்டி வசந்தபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன், புனல்வாசல் தாமரைச்செல்வன், பாண்டியன் ஆகியோர் சேர்ந்து செல்லமுத்துவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர்.
இதனால் உடனடியாக காரில் செல்லமுத்துவை கடத்தியுள்ளனர். இதனை பார்த்த அவரது நண்பர்கள் செல்லமுத்துவின் மனைவிக்கு தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். பின்னர் இரவு முழுவதும் ஆடைகளை உருவிவிட்டு அரை நிர்வாணமாக அவரை தாக்கியுள்ளனர். பின்னர் அதிகாலையில் கைகளத்தூர் பகுதியில் இறக்கிவிட்டு சென்றுள்ளனர். இதன் பின்னர் காவல்துறையினர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவரை தேடி வந்தனர். ஆனால் அவர்கள் தலைமறைவாகிவிட்டனர். ஆனால் ஆறுமுகத்தின் மகன் மருதமுத்து மட்டும் சிக்கிவிட்டார். இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications