முன்னாள் முதல்வர்கள் இபிஎஸ், ஓபிஎஸ் முதல் முன்னாள் அமைச்சர்கள் வரை! மண்ணை கவ்விய அதிமுக! தூள் திமுக
சேலம்: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வார்டு முதல் முன்னாள் அமைச்சர்களின் வார்டுகள் வரை அனைத்திலும் அதிமுக தோல்வியை கண்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்தது.
இந்த தேர்தலில் தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்றில் உள்ள 12,838 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தேர்தல் முடிவுகள் உள்ளன. அதிமுக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் இருக்கும் பகுதிகளில் உள்ள வார்டுகளில் அதிமுக தோல்வி அடைந்துள்ளது.

அதிமுக அதிர்ச்சி
இது அதிமுகவிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகராட்சி
23-வது வார்டுக்கு உட்பட்ட நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் தான் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வசித்து வருகிறார். இந்த வார்டில் திமுக வேட்பாளர் சிவகாமி வெற்றி பெற்றுள்ளார். எடப்பாடி பழனிச்சாமிக்கு சிலுவம்பாளையத்தில் தான் வாக்கு உள்ளது.

தேனி மாவட்டம்
அது போல் ஓ பன்னீர்செல்வம் வசிக்கும் தேனி மாவட்டத்தில் திமுக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தேனி மாவட்டம குச்சனூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 12 வார்டுகளில் 11 வார்டுகளை திமுக கைப்பற்றியது. அது போல் பெரியகுளம் நகராட்சியும் திமுக வசம் சென்றுள்ளது.

நத்தம் விஸ்வநாதன்
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் கோட்டையான நத்தம் பேரூராட்சியையும் திமுக வெற்றி பெற்றது. அது போல் திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளரும் அந்த பகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான திண்டுக்கல் சீனிவாசனின் (முன்னாள் அமைச்சர்) ஒட்டன்சத்திரம் நகராட்சியில் அதிமுக வாஷ் அவுட் ஆகியுள்ளது. திண்டுக்கல் மாநகராட்சி, பழனி, ஒட்டன்சத்திரம், கொடைக்கானல் நகராட்சிகள் 23 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது.

உடுமலை ராதாகிருஷ்ணன்
வேடசந்தூர், எரியோடு பாளையம், அய்யலூர், வடமதுரை ஆகிய 5 பேரூராட்சிகளையும் திமுகவே வென்றுள்ளது. அது போல் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு சொந்தமான உடுமலை நகராட்சியிலும் திமுக வென்றுள்ளது. முன்னாள் அமைச்சர் தொண்டாமுத்தூர் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 12 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றது. அது போல் சிவகாசி மாநகராட்சி 9வது வார்டில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அக்கா மகன் வசந்தகுமார் தோல்வி அடைந்துள்ளார்.

ஜெயக்குமார் கைது
அது போல் ராயபுரம் தொகுதியில் 49 ஆவது வார்டில் கள்ள ஓட்டு போட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நரேஷ் என்பவரை அரை நிர்வாணமாக்கி போலீஸில் ஒப்படைத்தார். இதற்காக நரேஷ் கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். ஜெயக்குமார் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் தொடர்புடைய 49 ஆவது வார்டில் திமுக வேட்பாளர் இளைய அருணா வெற்றி அடைந்துள்ளார். ஆக முன்னாள் முதல்வர், துணை முதல்வர் முதல் முன்னாள் அமைச்சர்கள் வரை அவர்களின் இடத்தில் தோல்வியையே சந்தித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications